சிறப்பு செய்திகள்

எதிர்கால தூண்களின் விபரீத முடிவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது – துணை முதலமைச்சர் மனவேதனை

சென்னை

மதுரை மாணவி தற்கொலை சம்பவத்தையொட்டி அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலத்தூண்களாகிய மாணவிகளின் விபரீத முடிவு மிகுந்த துயரத்தை அளிப்பதாக மனவேதனையுடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா இன்று (நேற்று) காலை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீத முடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம் தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.