சிறப்பு செய்திகள்

மாணவச் செல்வங்களின் விபரீத முடிவு மிகுந்த மனவேதனையளிக்கிறது – மதுரை மாணவி தற்கொலை சம்பவத்துக்கு, முதலமைச்சர் இரங்கல்

சென்னை

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவச் செல்வங்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இதுபோல் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாணவ செல்வங்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற இன்பகரமான அறிவிப்பை வெளியிட்டார். அதற்கடுத்து கல்லூரி மாணவர்களின் இறுதி பருவதேர்வை தவிர மற்ற பருவதேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். அண்மையில் கூட கட்டணம் செலுத்தியிருந்த அரியர்ஸ் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களின் மனதில் நங்கூரம் போல் பதிந்து விட்டார். இந்நிலையில் நீட்தேர்வு பயத்தால் மதுரையில் மாணவி தற்கொலை செய்து சம்பவம் மனவேதனை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் ஜோதிஸ்ரீ துர்கா இன்று (நேற்று) தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச்செல்வங்கள் மனஉறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.