கள்ள மவுனம் சாதிக்கிறார் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடதமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி, ஆந்திராவில் 93 கி.மீ. தூரம் பயணித்து, அம்மாநிலத்தின் குப்பம் மாவட்டத்தில் 33 கி.மீ. பயணிக்கிறது.
பின்பு நம் தமிழகத்தின் வாணியம்பாடி அருகே புல்லூரில் தடம் பதிக்கிறது. சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. ஆண்டு தோறும் பாலாற்றில் குறைந்த பட்சம் 80 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது என்று அளவீடுகள் தெரிவிக்கின்றன.
இதில் கர்நாடகா 20 டி.எம்.சி.யும், ஆந்திரா 20 டி.எம்.சி.யும், தமிழகம் 40 டி.எம்.சி. தண்ணீரும் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்பது மூன்று மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தம். ஆனால், தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும், விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.
திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை திசை திருப்பும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும். கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலியுறுத்துகிறது. இந்த விடியா அரசு நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.