சிறப்பு செய்திகள்

பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், 4-ம் கட்ட தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகளின் படி பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து, இரவு 10 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார்.