திருப்பூர்

தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குவீர் – நிர்வாகிகளுக்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வேண்டுகோள்

திருப்பூர்

மூன்றாவது முறையும் கழகமே ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதற்கேற்ப அனைவரும் இப்போதே தேர்தல் பணிகளை துவங்கி விடுங்கள் என்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினருக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியம் மற்றும் மூலனூர் கன்னிவாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மூலனூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் வி.பி.பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் வரவேற்றார்.

கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கழகச் செயல்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி புதிய பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளையும், புதிய உறுப்பினர்கள் சேர்த்தலுக்கான கழக உறுப்பினர் படிவத்தையும் வழங்கினார்.

அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா பேரவை எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகிய சார்பு அணிகளின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பதற்கு அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் இங்கு புதிதாக கழகத்தில் உறுப்பினராக இணைய விருக்கும் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு அம்மாவின் அரசு வழங்கி வரும் சாதனைகளை தகவல் தொழில்நுட்ப பிரிவில் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய தொழில் நுட்பம் மூலம் நம் கட்சியின் பத்தாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

அதிலும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே மிக மிக சிறப்பாக செயல்பட்ட அரசு நம் அம்மாவின் அரசு என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த இக்கட்டான நெருக்கடி நேரத்திலும் முதலீட்டாளர்கள் தாங்கள் தொழில் தொடங்க தேர்ந்தெடுத்த மாநிலம் நம் மாநிலம். அதற்கு நம் அம்மா அவர்களின் நல்லாட்சியே காரணம்.

ஆகவே 2021-ல் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலிலும் நம் அம்மாவின் நல்லாட்சியே தொடர வேண்டும். இதற்கு நாம் அனைவரும் மிக கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் ஓய்வின்றி உழைத்து நம் மாநிலத்தை எல்லாவற்றிலும் முதன்மையாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாதனைகளை எல்லாம் நாம் ஒவ்வொரு வரக்காளரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அந்த வகையில் நமது மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவில் நன்கு படித்த திறமை வாய்ந்தவர்களை திறனாய்வு தேர்வின் மூலம் ஒவ்வொருவரிடமும் நேர்காணல் செய்து தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். இன்னும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு பாகத்திலும் கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை நாம் உருவாக்க வேண்டும்.

அதாவது ஒரு பாகத்தில் 25 பேர் கொண்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை உருவாக்க வேண்டும் அதில் 16 ஆண்கள் 9 பெண்கள் இருக்கும் வகையில் உருவாக்க வேண்டும். இதில் நிர்வாகிகளாக 9 பேர் இருக்க வேண்டும். 6 பேர் செயற்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் 9 பேரில் 7பேர் ஆண்களாக இருக்க வேண்டும். 2 பேர் பெண்களாக இருக்க வேண்டும். செயற்குழுவில் உள்ளவர்கள் 4 பேர் ஆண்களாகவும், 2 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். நிர்வாகிகள் கீழ்க்கண்ட வகையில் இருக்க வேண்டும்.

அதாவது ஒரு தலைவர், இரண்டு துணைத்தலைவர், ஒரு செயலாளர், இரண்டு இணை செயலாளர்கள் (ஆண் ஒன்று, பெண் ஒன்று), இரண்டு துணை செயலாளர்கள் (ஆண் ஒன்று,பெண் ஒன்று) மற்றும் ஒரு பொருளாளர். இந்த பணிக்கு மிக சிறப்பாக செயல்படுபவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து 10 நாட்களுக்குள் தர வேண்டும். தேர்தலின் பொது இவர்களின் பணி மிக முக்கியமானது என்பது உங்களுக்கு தெரியும். அதற்கேற்றாற் போல் நீங்கள் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து மூன்றாவது முறையும் கழகமே ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதற்கேற்ப அனைவரும் இப்போதே தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.