தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் போட்டி-தகுதித்தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள மாணவ சமுதாயத்திற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

மதுரை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பில் நாட்டின் வருங்கால தூண்களான மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வு ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள திறன் மேம்பாட்டுக்கான வழிகாட்டு பயிற்சி முகாம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்சில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் ஆகியோர் தலைமை உரையாற்றினர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் புவனேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.

இம்முகாமினை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மற்றும தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் கழக செய்தித் தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் பேராசிரியர்கள் டாக்டர் சி.சுப்பிரமணியன், ராஜு, கண்ணன், செனட் சங்கர், ராஜசேகர், புலவர் சங்கரலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி முகாம் ஏற்கனவே கடந்த ஆண்டு கழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் நலன் கருதி மீண்டும் தற்போது நடைபெற்று வருகிறது. கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று கீதையில் கூறப்பட்டுள்ளது. கடமையை செய்ய வேண்டும், பலன் பெறும் அதிகாரம் நம்மிடம் இல்லை. அது இறைவனிடத்தில் இருக்கிறது. நீங்கள் கடமையே கண்ணாக செயல்படுத்திட வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆரம்பத்தில் 5 சதவீதம் இருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் கொடுத்த வழிகாட்டுதலால் மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் மதுரை மாவட்டத்தில் நோய் தொற்று குறைந்ததன் காரணமாக இன்று முதலமைச்சரின் பாராட்டை பெற்றுள்ளனர்.

பொதுவாக பேசுவது எங்கு குறைகிறதோ அங்கு தான் பிரச்சினை வருகிறது. எல்லோரும் மனம் விட்டுப்பேச வேண்டும். அதுமட்டுமல்லாது பெற்றோர் தங்கள் குழந்தையுடன் மனம் விட்டுப்பேச வேண்டும். அப்போது தான் மாணவர்கள் தங்களின் அழுத்தம் போகும். மாணவர்கள் எதை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்கக்கூடாது. புரட்சித்தலைவர் சினிமாவில் நுழையும்போது தள்ளுபடி செய்யப்பட்டார்.

ஆனால் அவர் மனம் தளரவில்லை. இன்று நாடு போற்றும் தலைவராக உள்ளார். இதற்கு காரணம் அவரின் தன்னம்பிக்கை. அதேபோல் புரட்சித்தலைவி அம்மா இந்த நாட்டை ஆள தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நெருப்பாற்றில் நீந்தி தான் மக்கள் போற்றும் மாபெரும் தலைவரானார்.அதேபோல் இன்றைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தன்னம்பிக்கை யுடன் செயல்பட்டதால் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்கொள்ள கால அவகாசம் தேவை என அம்மாவின் அரசு போராடி வருகிறது. ஒன்று அதை எதிர்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். கடந்த ஜூலை 14-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தனி சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்றைக்கு இந்தியா முழுவதும் 15,97,433 மாணவர்கள் 3,482 மையங்களில் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் 238 மையங்களில் எழுதினர். தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது.
பெற்றோர்கள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. அதேபோல் மாணவர்கள் எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்கக்கூடாது. பெற்றோர்கள் மாணவர்கள் மீது படிப்பு விஷயங்களில் எதையும் திணிக்கக்கூடாது.

மரத்தடி பள்ளியில் படித்த டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவிற்கு புகழ் போல் சேர்த்தார். அதேபோல் நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்து மத்திய நிதி அமைச்சராக இருந்து சாதனை படைத்து வருகிறார். நேத்ரா என்ற மாணவி தான் சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை கொரோனா நோய் தடுப்பு நிவாரண உதவிகளுக்கு வழங்கி பாரத பிரதமரிடம் பாராட்டு பெற்றுள்ளார். அதேபோல் மதுரையை சேர்ந்த பார்வையிழந்த மாணவி பூர்ண சுந்தரி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று உலகப் பார்வையை தன்பால் ஈர்த்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சி.ஓ.வாக இருந்து மதுரைக்கு பெருமை சேர்த்திருக்கிறார். மதுரையை சேர்ந்த அமுதா ஐஏஎஸ் அதிகாரி இன்று பாரத பிரதமரிடம் இணை செயலராக பணியாற்றுகிறார்.

பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் தன்னம்பிக்கையால் மின்சாரத்தை கண்டுபிடித்தார். இப்படி அனைவரும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டதால் தான் அவர்களால் சாதிக்க முடிந்தது. இதேபோல் உங்களால் சாதிக்க முடியும். நீட்தேர்வு மட்டுமே உங்கள் வாழ்க்கை அல்ல. இங்கு மாவட்ட ஆட்சியராக இருக்கும் வினய் மருத்துவப் படிப்பு படித்தவர். ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று மதுரை மாவட்டத்தை வழிநடத்துகிறார்.

உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். பி.காம் படித்தேன். பிறகு சமூக அறிவியல் படித்து அதன் பின் வழக்கறிஞருக்கு படித்தேன். தற்போது அம்மாவின் ஆசியால் 3 துறைகளுக்கு அமைச்சராக உள்ளேன். என் உயிர்விற்கு தன்னம்பிக்கை தான் காரணம். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை என்பது விதை ஆகும். மதுரையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்று மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் சர்வதேச அளவில் போட்டியிட்டு ஜனாதிபதி பாராட்டை பெற்றுள்ளார். இவர் உள்ளத்தில் ஊனம் இல்லை. அதனால் வெற்றி பெற்றுள்ளார். மாணவர்கள் உள்ளத்தில் ஊனம் இருக்கக் கூடாது.

ஆற்று நீர் பள்ளம், மேடுகளில் வளைந்து நெளிந்து முன்னேறிச் செல்கிறது. ஒருபோதும் பின்நோக்கி செல்ல வில்லை அதுபோல் முன்னேறிச் செல்ல வேண்டும். பின்னோக்கி செல்லக்கூடாது. இறைவன் தந்த உடலை பேணி காப்பது நம் கடமை, அதை மாய்த்துக்கொள்ள தார்மீக உரிமை கிடையாது. மாணவர்களாகிய உங்களுக்கு ஏதாவது மனச்சோர்வு இருந்தால் எங்களை அழையுங்கள். உங்களுக்கு நாங்கள் தன்னம்பிக்கை வழங்குகிறோம். துர்கா என்ற மாணவியிடம் ஒரு நிமிடம் நாங்கள் பேசியிருந்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்காது. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி ஒருபோதும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது.

அம்மாவின் அரசு என்றைக்கும் மாணவர்கள் பக்கம்தான், இன்றைக்கு கூட கொரோனா சூழ்நிலை கருதி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதேபோல் இதுவரை 65 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினிகளை அம்மாவின் அரசு வழங்கி உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள், நோட்புக், புத்தகம், யூனிபார்ம் இப்படி அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உங்களை ஆளாக்க வேண்டியது அம்மா அரசின் கடமையாகும். இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே மாணவர்களுக்கு இது போன்ற சலுகை திட்டங்களை எந்த அரசும் வழங்கியது கிடையாது. ஆகவே மாணவர்களுக்கு நீட் மட்டும் வாழ்க்கை இல்லை. பல்வேறு துறைகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. அதில் நீங்கள் வெற்றிபெற்று சாதனையாளராக மாற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை பாலு செய்திருந்தார். பா.வெற்றிவேல், கே.தமிழரசன், ஐ.தமிழழகன் ஆகியோர் நன்றி கூறினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்னதாக நீட்தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் நன்றி

பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கூறியதாவது;-

இந்த பயிற்சி முகாம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. நிச்சயம் போட்டித்தேர்வு மற்றும் தகுதி தேர்வுகளை எதிர்கொள்ள எங்களுக்கு மனம், தைரியம் வந்துள்ளது. தக்க நேரத்தில் சரியான பயிற்சி அளித்து, எங்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்த, முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு மாணவ, மாணவிகள் கூறினர்.