தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் – வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கடும் தாக்கு

மதுரை

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறினார்.

மதுரை மாநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
விக்னேஸ்வரன், கவிசெல்வம், பிச்சை, விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேசியதாவது:-

உலக நாடுகளில் உள்ள கட்சிகள் எல்லாம் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை வலைதளம் மூலமாக தான் செய்து வருகின்றன. அதுபோலத்தான் இனி வருகின்ற காலங்களில் தமிழகத்திலும் நடைபெறும். அந்த வலைதள பிரச்சார போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வாழ்ந்து வருகின்றனர். தமிழக மக்களுக்காக தன் கண்ணையே தானமாகக் கொடுத்துள்ள முதலமைச்சரின் இந்த தியாகத்தை போற்றும் வகையிலும், நன்றிக்கடனை செலுத்தும் வகையிலும் மதுரை மண்டலத்தில் உள்ள 13 வருவாய் மாவட்டங்களில் தலா 3,000 பேர் வீதம் கழக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 33,000 நபர்கள் கண் தானம் செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 33,000 கண் தானம் செய்வது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை. இதுபோன்று திமுகவில் ஸ்டாலின் செய்தது உண்டா?

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த போது அப்போது திமுக மத்திய அமைச்சர்கள் வாய்மூடி மவுனியாக இருந்தனர். மேலும் இதற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி வாதாடினார் அப்போது ஒன்றும் திமுக எதிர்க்கவில்லை இதையெல்லாம் மக்களிடத்தில் வலைதளம் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும். திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளது. அதனால் தான் கட்சியை வழிநடத்த தன் கட்சி உறுப்பினர்களை நம்பாமல் இந்தி தெரிந்த பீகாரியிடம் பல கோடியை வாரி இரைத்து ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் தமது இயக்கத்தில் அப்படியல்ல. இன்றைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற நமக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளனர். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு நமது பங்களிப்பை முழுமையாக அர்ப்பணிப்போம்.

இவ்வாறு மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேசினார்.