தற்போதைய செய்திகள்

கடலில் காணாமல் போன சென்னை மீனவர்களை ஒரு வாரத்தில் தாயகம் கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

கடலில் காணாமல் போன மீனவர்கள் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு வாரத்தில் தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 23.7.2020 அன்று சென்னை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 9 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்று 7.8.2020 அன்று கரை திரும்ப வேண்டிய செவுள்வலை ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு கரை திரும்பாமல் இருந்தது. மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல்படை மற்றும் சென்னை மீன்பிடி துறைகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளை கொண்டு காணாமல் போன் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சம்பந்தபட்ட மீனவர்களின் குடும்பங்களை நான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். எது எப்படி இருந்தாலும் காற்றின் வேகத்தின் காரணமாக திசை மாறி செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்திருந்தேன். மேலும் அவர்களுக்கு தேவையான நிதி உதவியை அளித்தேன். தொடந்து தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை வழியாக மியான்மர், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளிலும் காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகினை தேடுவதற்கு வேண்டுகோள் விடுத்தது.

தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் பலனாக 14.9.2020 அன்று அதிகாலை, காணாமல் போன 9 மீனவர்களும் மியான்மர் கடற்பகுதியில், மியான்மர் நாட்டுக் கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து மீனவர்களும் நலமாக இருப்பதாகவும், அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக நேற்று (14-ந்தேதி) காலை 7 மணிக்கு தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியை ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்தார்.