தற்போதைய செய்திகள்

கொரோனா காலத்தில் 1.08 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை

கொரோனா காலத்தில் மாநிலம் முழுவதும் 1.08 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகம் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது.

நோயை முற்றிலும் தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் நோய் ஏற்படும்போது அந்த நோயை போக்க மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து நோயற்ற நல்வாழ்வை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் இந்தியாவிலேயே புது முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ஏற்படுத்த உத்தரவிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் 200 வார்டுகளிலும் விரிவுபடுத்த அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 82,042 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 39.65 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர். இம்முகாம்கள் மூலம் 29,050 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் மற்றும் புரவி புயல்களின் காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளை முதலமைச்சர் நேரடி பார்வையில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பின்றி இருந்தது. குறிப்பாக மழை வெள்ளத்தால் சென்னையில் வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 5.3 லட்சம் குடும்பங்களை சார்ந்த 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி 06.12.2020 முதல் 13.12.2020 வரை 1,63,82,448 நபர்களுக்கு விலையில்லா சுத்தமான, சுகாதாரமான உணவு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் விரைந்து துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

பருவமழை காலங்களில் மழைக்கால தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுகாதார துறை அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு மழைக்கால தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நாள்தோறும் திடக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மழையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்புகள் மற்றும் பழுதுகளை உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சரி பார்க்க வேண்டும்.

ஊரகப்பகுதிகளில் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பிரதம மந்திரி ஊரக சாலை திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஏரி, குளம் மற்றும் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரி பராமரிக்கப்பட வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஒப்புதல் பெறப்பட்டுள்ள 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான ஒப்பந்த புள்ளிகளை பெற்று 30.01.2021க்குள் பணி ஆணை வழங்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் அரசின் சார்பாக பல்வேறு விதமான நலத்திட்டங்களையும், சிறப்பு நிதியுதவிகளையும் வழங்கினார். குறிப்பாக கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பு கடனுதவியை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலம் முழுவதும் 1,07,933 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1,266.66 கோடி சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று, புயல் மற்றும் மழை போன்ற பல்வேறு இயற்கை இடற்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் முதலமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் எவ்வித தொய்வுமின்றி பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர் அனைவரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும், பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலும் விரைந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.