தற்போதைய செய்திகள்

கருவாடு ஒருபோதும் மீன் ஆகாது தி.மு.க.வால் இனி ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை

கருவாடு எப்படி மீன் ஆக முடியாதோ அதே போல் தான் தி.மு.க.வால் இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. விக்னேஸ்வரன், கவிசெல்வம், பிச்சை, விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

இந்த கூட்டத்திற்கு படித்த இளைஞர்கள் நிறையபேர் வந்துள்ளீர்கள். நாங்கள் உங்களை போன்று கல்லூரி படிப்பை முடித்து இந்த இயக்கத்திற்கு வந்த போது எங்களை ஆச்சரியமாக பார்த்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏளனம் பேசினர். அதை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. இன்று இந்த இயக்கம் நாட்டிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாகி உள்ளது. தொண்டர்களை நம்பித்தான் இயக்கம். எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்கள் நம்பித் தான் உள்ளது.

திமுக அப்பா மகன், அப்பாவின் மகன், மகனின் மகன் என குடும்ப கட்சியாக உள்ளது. என்னைத்தவிர என் குடும்பம் கட்சிக்குள் வராது என்று சொன்னார் ஸ்டாலின். ஆனால் தற்போது ஸ்டாலினின் குடும்பமே கட்சிக்குள் வந்துள்ளது. எதையுமே மாற்றி பேசக்கூடியவர்கள் தான் தி.மு.க.வினர். திமுகவில் மன்னர் பரம்பரை ஒழியவில்லை.

அம்மாவின் சாதாரண தொண்டர்களாக இருந்து இன்றைக்கு கழகத்தை வழிநடத்தி மக்கள் போற்றும் ஆட்சி நடத்தியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்தி வருகின்றனர். கழகத்தில் விசுவாசமாக இருந்தால் பதவி தேடி வரும். உண்மையும், விசுவாசமும் என்றும் இருந்தால் அடிமட்ட தொண்டராக இருந்தால் கூட உயர் பதவிக்கு வரலாம்.

அதிமுகவின் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் படத்திற்கு கேரண்டி உண்டு. அவர் கட்சிக்கு கேரண்டி இல்லை என எதிர் கட்சியினர் விமர்சித்தனர். ஆனால் 13 ஆண்டுகள் திமுகவை ஆட்சியில் இல்லாமல் வனவாசம் போக செய்தார். எங்களின் ஒரே நோக்கம் எதிரியை (தி.மு.க.) வீழ்த்துவது மட்டுமே. ஆற்றுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோல அதிமுகவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் முக்கியம். கண்ணுக்கு எப்படி இரு இமை முக்கியமோ அதேபோல கட்சிக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முக்கியம். நீட் மோசமானது என்பதை அம்மா உணர்ந்து தான் அன்றே எதிர்த்தார். கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றினால் பாதிப்பு ஏற்படும் என நீட்டை எதிர்த்த ஒரே தலைவர் அம்மா.

திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அன்றே நினைத்திருந்தால் கல்வியை மாநிலப்பட்டியயில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றி இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் தற்போது நீட்டால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார் உதயநிதி. பித்தலாட்ட அரசியலைத்தான் திமுகவினர் செய்கின்றனர். நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். காவிரி நீட் என மொத்த துரோகத்தையும் செய்துவிட்டு ஆட்சிக்கு வர துடிக்கிறது. எப்படி கடல் நீர் வற்ற முடியாதோ, கருவாடு எப்படி மீன் ஆகாதோ அதேபோல் தான் திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.