தற்போதைய செய்திகள்

தமிழக மாணவர்களின் நலனை குழிதோண்டி புதைத்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி – அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை

நீட் தேர்வை ஆதரித்து தமிழக மாணவர்களின் நலனை குழிதோண்டி புதைத்தது திமுக,காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட்தேர்வை பொறுத்தவரையில் திமுக பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டக்கூடாது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் நீட் என்ற ஒரு தேர்வு முறையை கொண்டு வந்தார்கள். அப்படி அவர்கள் கொண்டு வரவில்லை என்றால் தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இல்லை. நீட்டை கொண்டுவர முழுமையாக முயற்சி எடுத்தது திமுக,காங்கிரஸ் கூட்டணி தான்.

இப்போது இவ்வளவு குரல் எழுப்பும் ஸ்டாலின் அன்று நீட் வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை.நீட் தமிழக மாணவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், நீட்டை கொண்டுவந்தால் நாங்கள் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று ஸ்டாலின் ஏன் தெரிவிக்கவில்லை.அன்றைக்கு மவுனமாக இருந்து விட்டு, நீட்டை கொண்டு வர காரணமாக இருந்து விட்டு அதனால் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்து நீட் அமல் செய்யப்பட்டது.நம்முடைய ஒரே நிலை தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பதுதான்.மாணவர்களின் நலனை குழிதோண்டி புதைத்தது திமுக,காங்கிரஸ் கூட்டணி.

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டக்கூடாது. வரலாற்றை எல்லாம் மறைத்துவிட்டு, ஏதே வானத்திலிருந்து குதித்தவர்கள்போல இன்றைக்கு பேசுவது வேடிக்கையாக உள்ளது. இது போன்ற செயலை தமிழ்நாட்டு மக்கள்,குறிப்பாக மாணவர் சமுதாயத்தினர் மன்னிக்க மாட்டார்கள். நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பg;பட்டுள்ளது.

நீட் தொடர்பாக நான் பலமுறை முதலமைச்சருடன் பிரதமரை சந்தித்துள்ளோம்.பிரதமரை சந்திக்கும்போதும்,மத்திய அமைச்சர்களை சந்திக்கும்போது சரி,முதலமைச்சர் அழுத்தம் திருத்தமாக தமிழக மக்கள் விரும்பாத ஒன்றாக நீட் உள்ளது. எனவே எங்கள் மாநிலத்திற்கு விதிவிலக்கு அளியுங்கள் என்று தெரிவித்தார்.மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்கிறோம்.இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.