தற்போதைய செய்திகள்

பதவியில் இல்லாவிட்டாலும் தொண்டர்களுக்கு கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும் – மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவபதி பேச்சு

சிவகங்கை

பதவி இல்லாவிட்டாலும் தொண்டர்களுக்கு கழகம் என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று சிவகங்கையில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி பேசினார்.

சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் செயலாளரும், தேவகோட்டை ஒன்றிய தலைவருமான பில்லா கணேசன் ஆகியோர் பேசினர்.

இதில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி பேசியதாவது:-

இளைஞர் அணி தொண்டர்கள் நல்ல உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். ஒருவர் பதவியில் இருந்தால் தான் மதிப்பு என்பது இல்லை வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் நாளைக்கு உங்களுக்கான ஒரு வாய்ப்பை கழகம் பெற்றுத்தரும். பதவி இல்லாவிட்டாலும் தொண்டர்களுக்கு கழகம் என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

அம்மா அவர்கள் ஆசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். ஆகையால் தான் இன்று ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பியதோடு, காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குடிமராமத்து பணி என்ற அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி கண்மாய், குளங்கள், ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய்களை சரி செய்த பயனாக இன்று தமிழகம் மழைநீர் சேமிப்புக்கான முழுபயனை பெற்ற காரணத்தால் தான் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று விவசாயிகளின் முதல்வர், குடிமராமத்து பணி நாயகன் என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் வழியில் நல்லாட்சி தொடர்ந்திட இளைஞர் அணி நிர்வாகிகள் நல்ல உற்சாகத்துடன் மனவலிமையுடனும் 2021ல் கழகம் தான் வெற்றி என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றிக்கு இளைஞர் அணியின் பங்களிப்பு சிறப்பாக இருக்க நீங்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எம்.சிவபதி பேசினார்.

இவ்விழாவில் நகர செயலாளர்கள் தேவகோட்டை ராமச்சந்திரன், காரைக்குடி மெய்யப்பன் மாவட்ட இளைஞரணி தலைவர் பாரதி கண்ணன், இளைஞர் அணி துணைத்தலைவர்கள் புதுக்குறிச்சி நடராஜன், ராஜா, கண்ணண், இளைஞர் அணி இணைச் செயலாளர் கண்டதேவி முருகன் என மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.