தற்போதைய செய்திகள்

நுகர்வோருக்கு தடையின்றி 24 மணிநேரமும் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை – அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவுறுத்தல்

சென்னை

நுகர்வோருக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவுறுத்தினார்.

பால் வளத்துறை மானியக் கோரிக்கைகளின் பொழுது சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகள் குறித்து, பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

பால் கொள்முதலை உயர்த்துதல், கொள்முதல் செய்யும் அனைத்து பாலையும் விற்பனை செய்தல், பால் உபபொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்துதல், பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை, பால் பணம்பட்டுவாடா ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் போன்றவற்றில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் .இடைதரகர்களால் பால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .தரமான பால் கொள்முதல் செய்வதை அலுவலர்கள் உறுதிபடுத்திட வேண்டும்.தமிழகத்தில் நுகர்வோருக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

ஆய்வின் பொழுது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கே.கோபால், பால் வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிர்வாக இயக்குநர் எம்.வள்ளலார், கூடுதல் பால் ஆணையர் கிருஸ்துதாஸ், இணை நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், பால்வளத்துறை அலுவலர்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.