தற்போதைய செய்திகள்

குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறைகூவல்

சென்னை

குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறைகூவல் விடுத்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் மகளிர் மருத்துவமனையில் நேற்று (14.09.2020) தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது-

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10-ம் நாள் மற்றும் ஆகஸ்டு 10-ம் நாள் குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் கோவிட்-19 (கொரோனா) பாதிப்பு காலம் என்பதனால் குடற்புழு நீக்க முகாம் 14.09.2020 முதல் 28.09.2020 வரை மூன்று சுற்றுகளாக தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

முதல் சுற்று 14.09.2020 முதல் 19.09.2020 வரையும், இரண்டாவது சுற்று 21.09.2020 முதல் 26.09.2020 வரையும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 28.09.2020 அன்றும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறும்.

1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும், 2 வயதிற்கு மேல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும். அல்பெண்டசோல் மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. இம்மாத்திரை நன்றாக கடித்து மென்று சாப்பிட வேண்டும். இச்சிறப்பு முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், சுகாதார பயிற்சி மேற்கொள்ளும் ANM, HI பயிற்சியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் என மொத்தம் 54,439 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. அனைத்து பெற்றோர்களும், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “குடற்புழு தொற்றிலிருந்து விடுபட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்விற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்”.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மருத்துவர் குருநாதன், பொது மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர்
மருத்துவர் சேகர், சிறப்பு அலுவலர் (அயற்பணி) மருத்துவர் வடிவேலன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.