சிறப்பு செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது : மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல்

சென்னை

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மார்ச் 24-ம்தேதியுடன் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. பேரவை விதிகளின்படி அடுத்த 6 மாதங்களில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

தற்போது தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் சமூக இடைவெளியுடன்நடத்த முடியாது என்ற காரணத்தால் வேறு இடத்தில் பேரவை கூட்டத்தை நடத்த பேரவை தலைவர் ப.தனபால் ஆலோசனை நடத்தி, பின்னர் கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 11-ம்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பேரவைக்கூட்டம் நடைபெறும் 3-வது தளத்துக்கு செல்லும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு,புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக பச்சை நிற அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.இதனை பயன்படுத்தி அனைவரும் பேரவைகூட்டத்தில் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மாதிரியை பின்பற்றி கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக சட்டபேரவை அமைக்கப்பட்டிருந்தது மண்டபத்தில் உள்ளதுபோல மறைந்த தலைவர்களின் படங்கள் வரிசையாக இடம்பெற்றிருந்தன.

சமூகஇடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. காலை 9.15 முதல் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வர தொடங்கினர். உறுப்பினர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. கூட்டம் தொடங்கிய முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு பேரவை தலைவர் ப.தனபால் தலைமையில் அவை கூடியது.

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.கோபாலன், கு.லாரன்ஸ், ஜெமினி கே.ராமச்சந்திரன், கே.என்.லட்சுமணன், மு.ஜான்வின்சென்ட் ஜி.காளன், எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் என்கிற சுப்பிரமணியன், பூ.கிருஷ்ணன், ஆர்.சுந்தர்ராஜன், குழந்தை தமிழரசன், அம்பிகாபதி, எஸ்.ராஜம்மாள், அ.அஸ்லம் பாஷா, பே.மாரி அய்யா, வ.பாலகிருஷ்ணன், ஓ.எஸ்.வேலுச்சாமி, அ.இரகுமான்கான், வ.சுப்பையா, கோ.நயினாமுகம்மது, தொ.ப.சீனிவாசன், ரா.அய்யாச்சாமி, நா.சண்முகம், கே.தங்கவேல் உள்ளிட்ட 23 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை தலைவர் ப.தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு மணி துளிகள் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானத்தை பேரவை தலைவர் ப.தனபால் வாசிக்க, அதனை தொடர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு மணிதுளிகள் அனைவரும் எழுந்து நின்றனர். இதனை தொடர்ந்து பேரவையின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் மீண்டும் நாளை( இன்று) காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்று பேரவை தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

இன்று ( 15ம்தேதி) கேள்வி நேரம், பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானம், அது தொடர்பான விவாதம் நடைபெறும். நாளை (16-ம் தேதி) காலை கேள்வி நேரம் முடிந்ததும் துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட உள்ளன.