தற்போதைய செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு

கடலூர்,

மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து கடலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாதிரிக்குப்பம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது .

கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன், கழக மீனவர் பிரிவு இணை செயலாளர் கே.என்.தங்கமணி, மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட கழக துணை செயலாளரும், கடலூர் ஒன்றியக்குழு தலைவருமான தெய்வ.பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம பழனிசாமி வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

விடியல் அரசை எதிர்த்து மக்களிடையே உள்ள உள்ளக்குமுறலை வெளிக்கொண்டு வருகின்ற போராட்டமாக 28-ந்தேதி (நாளை) போராட்டம் அமைய வேண்டும். ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ள இந்த போராட்டம் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆளும் தி.மு.க. அரசு விடியல் தரப் போவதாக சொல்லி மக்களிடையே ஓட்டு வாங்கி இப்போது மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது.

ஆட்சியில் இல்லாதபோது தி.மு.க. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்ற தவறான வாக்குறுதிகளை மக்களிடையே தந்து அவர்களின் வாக்குகளை பெற்றது. மேகதாது அணை விஷயத்தில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து விடுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தது.

மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவோம் என பல்வேறு வாக்குறுதிகளை இந்த அரசு மக்களிடையே தந்தது.

ஆனால் அதை எதையும் நிறைவேற்றாமல் வாக்களித்த வாக்காளர்களுக்கு தந்த உறுதியை நிறைவேற்றாமல் மக்களிடம் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றது. இதை கண்டித்து நமது கடலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி விடியல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன் நன்றி கூறினார்.