மதுரை

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. செய்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் – வி.வி.ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை

நீட் தேர்வில் திமுக செய்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் மதுரை மேற்கு ஒன்றியம் ஊமச்சிகுளத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசு என்ற பெரியண்ணன், மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, வண்டியூர் முருகன், திருப்பாலை ஜீவானந்தம், தனம் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கே.சி.பொன் ராஜேந்திரன், கணேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் என்.கே.பி.அருண் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்று புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணிலடங்கா திட்டங்களை அம்மா அரசு வழங்கியுள்ளது. எதற்கெடுத்தாலும் கழக அரசை ஸ்டாலின் குறை கூறுகிறார். கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனை திட்டங்களை போல் திமுக ஆட்சிக் காலத்தில் செய்தது உண்டா? இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று கூறினார்கள் திமுக ஆட்சியில். யாருக்கு கொடுக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வில் திமுக செய்த துரோகத்தை மக்கள் இன்னும் மறக்க மாட்டார்கள்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.