தற்போதைய செய்திகள்

கரூர் நகரத்தில் அம்மா சாலை பணிகள் 60 சதவீதம் நிறைவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர்

கரூரில் அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் நகரத்தைச் சுற்றியுள்ள பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில், கரூர் ரயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை எண்.7 வரை அமைக்கப்பட்டுவரும் “அம்மா சாலை”யின் பணி முன்னேற்றம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது கரூர் மாவட்டம். ஆயத்த ஆடை உற்பத்தியிலும், கொசுவலை உற்பத்தியிலும் உலக அளவில் முக்கிய வர்த்தக நகராமாக உருவெடுத்துள்ளது கரூர் நகரம். மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் கரூர் மாவட்டத்திற்கு கேட்கின்ற திட்டங்களையெல்லாம் இல்லையென்று சொல்லாமல் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.

அந்த வகையில், கரூர் நகரப்பகுதியில் 20 பிரதான சாலைகளை இணைத்து கரூர் ரயில் நிலையம் முதல் பைபாஸ் சாலை வரை 2,600 மீட்டர் நீளத்திற்கு அம்மா சாலை அமைக்க முதலமைச்சர் ரூ.21.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது அம்மா சாலை அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிவுற்றுள்ளது, மீதமுள்ள பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

கரூர் ரயில் நிலையத்தில் தொடங்கும் அம்மா சாலையானது, கரூர் நகரத்திற்குள் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நடைபெறும் முக்கிய பகுதிகள் அடங்கிய சாலைகளை இணைத்து தேசிய நெடுஞ்சாலையினை எளிதாக அணுகும் விதமாக கரூர் – ஈரோடு இரயில் பாதைக்கு இணையாக இரயில் பாதையின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலை முழுவதும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது, தற்போது கரூர் நகரம் சந்தித்து வரும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.

அம்மா சாலையானது, கரூர் நகரத்தில் உள்ள முக்கிய 20 குறுக்கு சாலைகளை இணைத்து 12 மீட்டர் அகலம் கொண்ட 2,600 மீட்டர் நீளம் கொண்ட சாலையாக அமைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது சாலையை ஒட்டி மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகள் வசதியும் ஏற்படுத்தப்படுகின்றது.

சாலை அமைக்கும் பணிக்கு ரூ.18 கோடியும் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.3.12 கோடியும் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூர் ரயில் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 7 வரை இணைப்பு சாலை 2.60கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளதில் நகராட்சி சாலை 386 மீட்டர் (4635ச.மீ) நீளத்திலும், பொதுப்பணி துறைக்கு சொந்தமான பகுதியில் 150மீ (1799ச.மீ) நீளத்திலும், ரயில்வே இடத்தில் 482மீட்டர் (5788ச.மீ) நீளத்திலும், இந்துசமய அறநிலைத்துறையின் இடத்தில் 103மீட்டர் (1243ச.மீ) நீளத்திலும் சாலையானது அமையப்பட உள்ளது. சாலையின் மொத்த பரப்பளவு 31200ச.மீட்டர் ஆகும்.

கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டோர் இத்திட்டத்திற்கு தங்களது நிலத்தினை தானமாக வழங்கியுள்ளனர். அதனடிப்படையில், தனியாருக்கு சொந்தமான 51 புல எண்களில் ரூ.10.37 கோடி மதிப்பிலான 14,185 ச.மீட்டர் பரப்பளவு இடங்கள் சாலைக்கென தானமாக பெறப்பட்டுள்ளது. விரைவில் அம்மா சாலை பணிகள் முடிவுற்று முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்படும். அம்மா சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது, ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி பலமடங்கு பெருகும் வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, கரூர் நகராட்சி ஆணையர் சுதா, நகராட்சிப் பொறியாளர் நக்கீரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.