தற்போதைய செய்திகள்

தி.மு.க காலாவதியான கட்சி, தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ஸ்டாலின் டி.வி.யில் பேசுகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

திருநெல்வேலி

தி.மு.க ஒரு காலாவதியான கட்சியாகி விட்டது. அதனால் தான் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஸ்டாலின் டி.வி.யில் பேசுகிறார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட் வரவேற்றார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, கழக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ கழக அமைப்பு செயலாளர்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், சீனிவாசன், கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பியுமான விஜிலா சத்தியானந்த் உட்பட பலர் பேசினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- 

எட்டு மாதங்களில் ஆட்சியை பிடித்து விடலாம் என தி.மு.க கனவில் உள்ளது. தி.மு.க ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் ஏற்கனவே மறக்கவில்லை. நிலஅபகரிப்பு, ன்வெட்டை ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டில் தள்ளியது, கட்சி மற்றும் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறக்கவில்லை. மக்களின் மனநிலையை புரியாமல் ஏஜென்சியை நியமனம் செய்து கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின். தி.மு.க.வுக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. தி.மு.க. காலாவதியாகி விட்டதால் இந்த ஆட்சி முடிந்து விடும் என தொண்டர்களை உற்சாகப்படுத்த டி.வி முன் இருந்து பேசி வருகிறார் ஸ்டாலின். அவர் கடைசி வரை பேசதான் முடியும்.

கொரோனா என்ற பெரும் உயிர் அச்சுறுத்தலை தாண்டி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதித்த மக்களுக்கு அரிசி, கோதுமை, காய்கறி, மருத்துவ உதவிகள் அனைத்தையும் கழக தொண்டர்கள் செய்து வந்தார்கள்.

டி.வி முன் இருந்து ஸ்டாலின் பேசியதை தவிர அவர் எந்த மக்கள் பணி செய்தார் கொரோனா என்ற நோய்க்கு மருந்துகள் இல்லாத நேரத்திலும் நாம் 86 சதவீதம் மக்களை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளோம். நெல்லை மாவட்டம் கழகத்துக்கு திருப்புமுனையை தந்துள்ளது. எனவே அதிக இளைஞர்களை பேரவையில் இணைத்து 2021ம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.