சிறப்பு செய்திகள்

“கொரோனா” பேரிடரை எதிர்கொண்டதில் வெற்றி – பேரவையில் துணை முதலமைச்சர் பேச்சு

சென்னை, செப். 16-

அம்மா அவர்கள் கற்றுத் தந்த பாடத்தின் அடிப்படையில், கொரோனா பேரிடைரை எதிர்கொண்டு வெற்றி கண்டிக்கிறோம் என்று பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம் வருமாறு:-

திராவிட இயக்கத்தினுடைய தலைக் காவேரியாய், பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நன்னாள் இன்று. இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அண்ணாவின் பெயரால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக இருந்து முத்தான பல திட்டங்களைத் தந்து, அதற்கு பின்னால் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத மாபெரும் சக்தியாக உருவாக்கித் தந்து, 16 ஆண்டு காலம் தமிழகத்தினுடைய முதலமைச்சராக, ஆண்ட கட்சி, மீண்டும் ஆளுகின்ற உரிமையை 32 ஆண்டுகளுக்குப் பின்னால், பெற்று தந்து ஒரு வரலாற்றினை உருவாக்கி தந்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அம்மா அவர்களின் ஆட்சி, நீண்ட ஆண்டு காலம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதனை நான் இந்த நேரத்தில் நினைவுப்படுத்தி, எந்த நோக்கத்திற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தினை ஆரம்பித்தாரோ, அந்த நோக்கம் இன்றளவும் தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்கின்ற இயக்கமாக, அம்மா அவர்கள் சொன்னார்களே, எனக்குப் பின்னாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 100 ஆண்டுகாலம் 1,000 ஆண்டு காலம் கழகம்தான் ஆட்சியில் இருக்கும் என்று சொன்னார்கள். அந்த நிலைப்பாட்டோடுதான் நாங்கள் இன்றைக்கு இந்த ஆட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கிறோம்.

எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று நோய் இன்றைக்கு உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. எந்தச் சூழ்நிலையிலும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இயற்கைச் சீற்றங்கள் நம் தாயகத்தை ஆட்கொண்டபோது, அது சுனாமியாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி,வறட்சியாக இருந்தாலும் சரி, பெரும் வெள்ளமாக இருந்தாலும் சரி அதையெல்லாம் எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுகின்ற ஆட்சியாகத்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கற்றுத் தந்த பாடத்தின் அடிப்படையில், அவர்கள் நடத்திய ஆட்சியின் வழிகாட்டுதலை நாங்கள் மேற்கொண்டு, இந்த கொரோனா பேரிடரை எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் உரையின்போது, கொரோனா பேரிடரின் காரணமாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்களை மறுபரிசீலனை செய்து, நிதி ஒதுக்கீடு செய்வது பற்றிய அறிவிப்பு இல்லை என்ற குறைபாட்டை விளக்க வேண்டுமென்று சொன்னார். அவருக்கு சில விளக்கங்களை நான் இந்த அவையில் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கோவிட்-19 நோய் பரவலால் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், பொதுநல மற்றும் மக்கள் நலத் திட்டங்களை அம்மா அரசு எவ்வித குறைவுமின்றி செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்னடைவு நிலவும் பொழுது, மக்களின் நுகர்வு தேவையில் குறைவு ஏற்படுவதால், அரசு தனது செலவினங்களை அதிகப்படுத்தி மக்கள் பயனடையும் விதம் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினால் மட்டுமே, பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரிக்கும். ஆகவே, மாண்புமிகு அம்மாவின் அரசு மக்கள் நலச் செலவினங்களைக் கட்டுப்படுத்திட விரும்பவில்லை.

கொரோனா நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்துவிதமான கூடுதல் செலவினங்களும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தாக்கம் தமிழகத்தை அடைந்தவுடன், நாட்டிலேயே முன்னோடியாக, நமது முதலமைச்சர், பாரத பிரதமருக்கு, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் நாள் கடிதம் எழுதி ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு கடன் வாங்கி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 9000 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த அரசமைப்புச் சட்டம் ஷரத்து 205(1) (அ)-ன்படி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் சில தலைப்புகளில், அந்த வருடத்திற்கு குறைபாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு எதிர்பாராத செலவுகள் பலவற்றை செய்யும்படியான சூழ்நிலை அமைந்தாலும், துணை நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்து சரிசெய்து கொள்ளலாம் என தெளிவாக இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

அதன்படியே, தற்போது சட்டசபையில் துணைநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றது. ஆகவே, 2020-2021 ஆம் ஆண்டிற்கு புதிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என சிலர் இங்கே முன் வைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய வாதம் முன்வைக்கும் வாதம் அவசியம் இல்லாதது என்பதை நான் இந்த சட்டமன்றத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதுபோக, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதலுக்காக 830.60 கோடி ரூபாய், மருத்துவ கட்டுமானப் பணிகளுக்கான 147.10 கோடி ரூபாய், கூடுதலாக நியமிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கான உணவு மற்றும் இதர ஊக்க செலவினங்களுக்காக 243.50 கோடி ரூபாய், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பொதுவான செலவாக 638.85 கோடி ரூபாய், மருத்துவமனை தனிமைப்படுத்துதல் செலவினங்களுக்கான 262.25 கோடி ரூபாய், வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 143.62 கோடி ரூபாய்…

பொது விநியோகத் திட்டம் மூலம் இலவசமாக பொருட்கள் வழங்கி வருவதனாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நிருபர்கள், மீனவர்கள், திருநங்கைகள், பழங்குடியினர்கள், வியாபாரிகள், சீர்மரபினர், நரிக்குறவர்,பூசாரிகள், உலமாக்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், முடிதிருத்துவோர், நலவாரிய உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு ரொக்கப் பண உதவியாக மொத்தம் 4,896.05 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம், கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆக மொத்தம், கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 7,167.97 கோடி ரூபாய், அம்மா அவர்களின் அரசினால் செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வளர்ச்சியைப் பெருக்குவதற்கு, தமிழக அரசு, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் முனைவர் சி. ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அம்மா அவர்களுடைய அரசு. அந்தக் குழு பல்வேறு துறைச சார்ந்த பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்வி.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், செலவினங்களை மறுசீராய்வு செய்து அவற்றை வரவினங்களுக்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியமாகும். அரசின் மொத்த வருவாய்ச் செலவினங்களில் 55 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் குறித்த பொறுப்பேற்கப்பட்ட செலவினங்களுக்காகவே சென்றுவிடுகின்றது.

மேலும் 39 சதவீதத் தொகையானது, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களுக்குத் தேவைப்படும் அவசியமான மானியங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்ற அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிதியுதவி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பகிர்வு நிதி மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெரும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. எனவே, செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருசில வாய்ப்புகளே உள்ளன.

தமிழ்நாட்டில் செலவுகளை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஆணைகளை ஒட்டி, அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 01-01-2020, 01-07-2020 மற்றும் 01-01-2021 ஆகிய மூன்று அரையாண்டு அகவிலைப்படி தவணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடப்பு ஆண்டு 2020-2021-ல் 4,947.23 கோடி ரூபாய் சேமிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு பணியாளர்கள் ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணப்பயன் பெறுவதை தற்காலிகமாக நிறத்தி வைத்ததன்மூலம் நடப்பாண்டில் 2,448.82 கோடி ரூபாய் செலவினம் மிச்சப்படும்.

கடந்த காலங்களிலும் மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட போதெல்லாம், திட்டம் சாராத செலவினங்களைக் குறைத்தல், அகவிலைப்படி உயர்வினை முற்றிலுமாகத் தவிர்த்தல் மற்றும் தள்ளிவைத்தல் மற்றும் பிற படிகள்/சலுகைகளை நிறுத்திவைத்தல் போன்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தியது.

மேலும், அரசாணை 249 மூலம் அலுவலகச் செலவுகள் மற்றும் ஏனைய சில்லரைச் செலவினங்கள், விளம்பரச் செலவினங்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கைச் செலவுகள், மோட்டார் வண்டி வாங்குதல், இயந்திரங்கள் மற்றம் சாதனங்கள் வாங்குதல், பயிற்சி மற்றும் அச்சிடல் செலவுகள், கணினி மற்றும் துணைப் பாகங்கள் வாங்குவதற்கு உண்டான செலவுகள், பயணப்படிகள் மற்றும் தினப்படிகள், விடுப்புப் பயணச் சலுகைகள் ஆகிய செலவின வகைப்பாடுகளில் செலவு குறைப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்கள் துணை நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப் பட்டுள்ளன. செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திருத்திய மதிப்பீடுகள் வெளியிடப்படும்பொழுது நிதி நிலை அறிக்கையில் உள்ள சம்பந்தப்பட்ட தலைப்புகளில் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படும். வருவாய் வரவினங்களின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், ஏதேனும் மாற்றம் இருப்பின், உடனடியாக வருவாய் கணிப்புகள் மாற்றியமைக்கப்படும். அரசு செயல்படுத்திவரும் நலத் திட்டங்கள் மக்கள் நலனுக்காக எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருளாதாரம் நலிவுற்றிருக்கும்பொழுது அரசு செலவுசெய்தாலொழிய, வேறு யாராலும் செலவு செய்து பொருளாதாரத்தை மீண்டு எழச் செய்ய இயலாது. ஆகவே, தொடர்ந்து மக்கள் நலச் செலவினங்களை செயல்படுத்துவதில் அம்மா அவர்களின் அரசு உறுதியுடன் உள்ளது. முதலமைச்சரின் அறிவிப்புகள், அமைச்சர்களின் அறிவிப்புகள், 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அம்மா அவர்களுடைய அரசு செயல்படுத்தும்.

மேற்கூறிய காரணங்களால், 2020-2021-ம் ஆண்டிற்கு திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீடு தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்வைக்கும் கோரிக்கை அவசியமில்லாதது என்று தெளிவாக தெரிய வருகின்றது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.