சிறப்பு செய்திகள்

பொதுமக்கள் குறைகளை தீர்க்க ரூ.12.78 கோடியில் புதிய திட்டம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து உடனடியாக தீர்வு காண முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கற்றுத் தந்த பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளான இன்று நாம் அன்னாரை போற்றி புகழ்வோம். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா அவர்களின் திருநாமத்தின் பெயரிலே கட்சியை தோற்றுவித்து 11 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார்.

அதற்குப்பிறகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பதினைந்தரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார். அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு, பேரறிஞர் அண்ணாவின் திருநாமத்தின் பெயரிலே இருக்கின்ற இந்த இயக்கம், இருபெரும் தலைவர்களின் மறைவிற்கு பிறகு மூன்றரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்திலே தந்து கொண்டிருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளிலே அவரை போற்றி புகழ்வோம்.

தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. மாவட்ட அளவில் திங்கள்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்ட குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன. இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது.

எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது. எனவே, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்குத் தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக தகவ

ல் தொழில் நுட்பத் துறையின் மூலம் 12.78 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டமாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையமாக செயல்பட இருக்கும் இம்மையம், தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். குறைதீர்க்கும் முகாம்களிலோ இணைய தளத்திலோ அல்லது அரசு அலுவலர்களோ குறை தீர்க்கும் மனுக்களைப் பெறும்போது வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களே அதிகமாக உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த மையங்களில் பெறப்படும் அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தேவைப்படின் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத்துறைகள் தொடர்பான தனது குறைகளை, மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள் “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.