சிறப்பு செய்திகள்

13 மாணவர்களின் மரணத்திற்கு திமுக தான் காரணம் – பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து நீட்தேர்வு குறித்து பேசினார். இதே பிரச்சினை குறித்து அதிமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருந்தார்கள். இவை அனைத்தையும் தகவல் கோரும் வகையில் எடுத்துக் கொள்வதாகவும் கட்சிக்கு ஒருவர் வீதம் பேச பேரவை தலைவர் ப.தனபால் அனுமதி அளித்தார்.

இதன்படி அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேசுகையில், வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. நீட் தேர்வு வந்ததற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் காரணம். 21.10.2010 தேதியன்று தான் மத்திய ஆட்சி நீட்தேர்வை கொண்டு வந்தது. இது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி, அதன் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பு வந்தது. எனவே நீட் தேர்வு வருவதற்கு முழுக்க, முழுக்க திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எங்கள் ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை என்று தெரிவித்தார்.அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து, 2010ம் ஆண்டு நீட் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? மத்தியில் அப்போது யார் ஆட்சி இருந்தது? மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இதைத் தான் உறுப்பினர் இன்பதுரை கூறுகிறார் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய இன்பதுரை, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்த போது தான் நீட் வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் போடப்பட்டு நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால் இதனை எதிர்த்து காங்கிரஸ் மறு ஆய்வு மனு போட்டார்கள். அப்போது நீங்கள் பாராளுமன்றத்தில் அமைதியாக இருந்தீர்கள். வரலாற்று பிழையை செய்தீர்கள். மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்.

19.7.2012 அன்று நமக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் இல்லை. அதிமுக உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆனால் ராஜ்ய சபையில் இந்த சட்டம் குறித்து விவாதம் வந்தபோது அங்கு 3 தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தீர்கள். ஆனால் அதனை நீங்கள் எதிர்க்கவில்லை, வெளிநடப்பும் செய்யவில்லை. இன்று மாணவர்களின் கல்லறை மீது ஏறி நின்று அரசியல் செய்கிறீர்கள். முழுக்க முழுக்க தி.மு.க. ஆதரவுடன் தான் நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது.

நீட் தேர்வுக்கு எதிராக அம்மா எப்படி எல்லாம் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வுக்கு அம்மா தமிழகத்தில் விலக்கு கேட்டார். இதற்கு அட்டர்னி ஜெனரலும் சாதகமாக கருத்து தெரிவித்தார். ஆனால் சுகாதாரத்துறைக்கு போனபோது அவர்கள் இதனை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் அப்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரசில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடினார். மாணவர்கள் மத்தியில் இப்போது முதலமைச்சர் அலை வீசுவதால் நீங்கள் இப்போது ஏதேதோ பேசுகிறீர்கள். உள்ளே ஒன்று பேசுகிறீர்கள். வெளியே ஒன்று பேசுகிறீர்கள் என்று சில வார்த்தைகளை தெரிவித்தார்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அவைகஙகுறிப்பில் இருந்து அந்த வார்த்தையை நீக்க பேரவை தலைவர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கரி ராமசாமி தலைமையில் பேரவை தலைவர் இருக்கை முன்பு வந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பேரவை தலைவர் அவர்களை அவர்களின் இருக்கையில் சென்று அமருமாறு பல முறை தெரிவித்தார். தொடர்ந்து உங்களுக்கு பேச அனுமதி வழங்கப்படும். அப்போது உங்கள் கருத்தை முன் வைக்கலாம். உங்கள் இருக்கைக்கு செல்லுங்கள் என்று பேரவை தலைவர் தெரிவித்தார்.

பலமுறை பேரவை தலைவர் கேட்டுக்கொண்டும் இருக்கைக்கு செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு பேசியபடி இருந்த காரணத்தினால் அவர்களை ( காங்கிரஸ் உறுப்பினர்களை ) பேரவையிலிருந்து இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். உடனடியாக பேரவை காவலர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்றினார்கள்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அவர் ஆஜர் ஆனாரா? இல்லையா? நடந்தது உண்மையா? இல்லையா? என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் நீட் தேர்வை தமிழகத்திற்கு நுழையாமல் தடுத்தது தி.மு.க. ஆட்சி தான் என்று தெரிவித்தார். பின்னர் நீட் குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர் அவரின் கருத்துக்களை தெரிவித்தபோது குறுக்கிட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவறான தகவல்களை பதிவு செய்யாதீர்கள். நீட் தேர்வு என்ற வார்த்தை எப்போது இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது யார் ஆட்சியில் இருந்தது என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தவறான தகவல் கிடையாது, உண்மையான தகவல். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததா, இல்லையா, மறுக்க முடியுமா? எதிர்க்கட்சி துணைத் தலைவரே சொல்லுங்கள், யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்பொழுது வந்தது? நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று இந்த நாட்டிற்கே தெரியும், யாருக்கும் தெரியாதது கிடையாது.

2010-ஆம் ஆண்டு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பைப்பெற்றது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுக்க முடியுமா? அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்? இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறீர்களே, இத்தனை பேர் வாதாடுவதற்கு காரணம் என்ன? காரண கர்த்தா யார்? இவ்வளவு பேருக்கு பிரச்சனை வந்ததற்கு யார் காரணம்?

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு யார் காரணம்? நாங்கள் அல்ல. நீங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறீர்களே, இப்பொழுது வெளிநடப்பு செய்தார்களே, அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி, வெளியில் வந்து முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொன்னார்கள். நீங்கள் கூட்டணியில் இடம்பெற்று 2010-ஆம் ஆண்டில் நீட்தேர்வை கொண்டு வந்தது தான் 13 பேர் மரணத்திற்கு காரணம். அதற்கு திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

இவ்வாறு முதலமைச்சர் ஆவேசத்துடன் பேசினார்.