தற்போதைய செய்திகள்

இலஞ்சி பேரூராட்சி தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு-கழக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

தென்காசி

இலஞ்சி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர் என்று கழக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் திமுக பேரூராட்சி தலைவி சின்னத்தாய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 மன்ற பொருட்கள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டன.

அப்போது பேசிய கழக கவுன்சிலரும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான காத்தவராயன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சியில் மக்கள் நலன் பணிக்காக ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்திலும் முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினர்.

இலஞ்சி பேரூராட்சியில் மின்விளக்குகளை சரி செய்வதற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு முறையில்லாத கணக்கு காண்பிக்கப்படுவதாகவும், பஞ்சாயத்து வாகனமான டிராக்டர் பழுது பார்த்தல், 8 ஆயிரத்து 500 ரூபாய் செலவில் ஒரு மோட்டாரை பழுது பார்க்கின்றனர். அந்த மோட்டாரின் தற்போதைய விலை சுமார் 9000 தான் இந்த அளவில் தான் பணிகள் நடக்கின்றன.

இதுபோன்று பல்வேறு விஷயங்களில் பழைய வரவு செலவுகளை (அதாவது இந்த உள்ளாட்சி அமைப்பு அமைவதற்கு முந்தைய கணக்கு வழக்குகள்) இணைத்து பல லட்சம் மோசடி செய்யப்பட்டு வருவதாக கழக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

கழக கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கு செயல் அலுவலர் பதில் ஏதும் கூறாமல் கூட்ட அரங்கை வெளியேறினார். இதையடுத்து முறைகேடுகள் தொடருமேயானால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கழக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.