தற்போதைய செய்திகள்

தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதா? தி.மு.க.வுக்கு அமைச்சர் கடும் கண்டனம்

சென்னை

திமுக தும்பை விட்டு விட்டு இன்று வாலை பிடிக்கிறது என்றும் நீட் தேர்வை எதிர்த்து கடைசி விளிம்பு வரை போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வு குறித்து விவாதம் நடைபெற்றது.இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

வரலாற்றை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. நீட் குறித்து பற்றி பேச காங்கிரசுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. 27.12.10 அன்று தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அந்த நாள் ஒரு கறுப்பு நாள். அதிமுக ஆட்சியிலா நீட் வந்தது? மத்தியில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்த போது தானே நீட் தேர்வு வந்தது. நுழைவுத் தேர்வு கூடாது. 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் அம்மா அவர்கள் உறுதியாக இருந்தார். பொது நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று அம்மா தெரிவித்தார்.

27.12.10 அன்று மத்திய அரசு தான் நீட் தேர்வு பற்றி நோட்டிபிகேஷன் போட்டார்கள். இந்த நிலையில் அம்மா தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்கு வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் மத்திய அரசு இதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வு கிடையாது என்று தீர்ப்பை பெற்று தந்தார். ஆனால் 10 நாட்களில் மத்திய அரசு மறு சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் போட்டது. அப்போது மன்மோகன் சிங் தான் பிரதமராக இருந்தார். அப்போது மாணவர்களின் உணர்வுகளை நீங்கள் பிரதிபலிக்கவில்லை. நீட் தேர்வு வந்ததற்கு யார் பொறுப்பு? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள். இது உங்களுக்கு கை வந்த கலை.

நீட் தேர்வை எதிர்த்து அம்மா அவர்கள் மட்டும் தான் நீண்ட சட்டப் போராட்டத்தை தன்னந்தனியாக நின்று நடத்தினார். எந்த மாநிலமும் துணைக்கு வரவில்லை. இருந்தாலும் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதில் அதிமுக மீது என்ன தவறு இருக்கிறது. அம்மா அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஒரு ஆண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தந்தார்.யார் யாரை குற்றம் சொல்வது? கொடிய பாம்பை உள்ளே கொண்டு வந்தது யார்? பாம்புக்கு பால் வார்த்தது யார்? விதை விதைத்தது யார்? தி.மு.க.வும் காங்கிரசும் தானே. நீட் தேர்வுக்கு விலக்கு கூடாது என்று ப.சிதம்பரத்தின் மனைவி நளினி வாதாடினாரே? இதைச் சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.தி.மு.க. தும்பை விட்டு விட்டு இன்று வாலை பிடிக்கிறது.

அம்மா அவர்கள் மறைவுக்கு பின் நீட் தேர்வு வேண்டாம் என்று பலமுறை மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நானும் நேரில் சென்று வலியுறுத்தினேன்.முதலமைச்சர் ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு பெற்று தந்திருக்கிறார். இது ஒரு வரலாற்று சாதனை. இந்த கல்லூரிகள் மூலம் ஒரே ஆண்டில் 1150 எம்.பி.பி.எஸ். சீட்டுகளை பெற்றுத் தந்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் 3050 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் கூடுதலாக கிடைத்துள்ளன. 11 மருத்துவ கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் எப்படி படிப்பார்கள் என்று கேட்டார்கள்? மருத்துவ சீட்களில் 15 சதவீதம் தான் அகில இந்திய கோட்டாவில் நிரப்பப்படும். மீதி 85 சதவீதம் நம் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் வழங்கப்படும். இத்தகைய வரலாற்று சாதனைகளை செய்து வருகிறார். நீங்கள் நீட்டை வைத்துக் கொண்டு அரசியல் செய்யாதீர்கள். இது மிகுந்த வேதனை தருகிறது.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.