தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ப்பு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

சென்னை

தமிழகத்தில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கரி.ராமசாமி அதிமுக உறுப்பினர் ஒ.கே. சின்னராஜ், திமுக உறுப்பினர் சேகர்பாபு ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உயர்கல்வி்த்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு 15 சதவீதம் கூடுதல் சேர்க்கையும் தனியார் கல்லுாரிகளுக்கு 10 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கையிடங்களுக்கும் அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பங்களுக்கு ஏற்ப இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு அரசு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லுாரிகளுக்கு கட்டிட வசதிகளுக்காக ரூ 210 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு முதலமைச்சர் அனுமதியளித்தார்.முதற்கட்டமாக ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கட்டட பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவில் அந்த பணி தொடங்கப்படும். முன்னாள் முதல்வர் அம்மா தலைமையிலான ஆட்சியில் 92 புதிய கலைக்கல்லுாரிகளை கல்லுாரிகளே இல்லாத பகுதிகளுக்கு வழங்கினார்.இந்த கல்வியாண்டில் மேலும் 10 அரசு கலைக்கல்லுாரிகள் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.