தற்போதைய செய்திகள்

சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி துவங்க அனுமதி – பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

சென்னை

சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் தமிமுன் அன்சாரி நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், நாகப்பட்டினம் அருகே திருச்சியில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருவதால் நாகப்பட்டினத்தில் புதிய சட்டக்கல்லூரி துவங்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் 7 சட்டக்கல்லூரிகள் இருந்தது.

தற்போது நமது முதலமைச்சர் ஆட்சியில் 6 சட்டக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.100 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி துவங்க அனுமதி கேட்டால் அனுமதி வழங்கப்படும் என்றார்.