தற்போதைய செய்திகள்

31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை – பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

சென்னை

இந்த ஆண்டு 31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனையை அம்மா அரசு படைத்துள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்
ஒரத்தநாடு தும்பத்திக்கோட்டை ஊராட்சியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் உறுப்பினர் குறிப்பிட்ட இடத்தில் சொந்த கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.ஆனால் பருத்திகோட்டை பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுவதும் தேவையான அளவிற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 90 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 658 நேரடி கொள்முதல் நிலையங்களில் 385 நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து சொந்த கட்டிடத்தில் இயங்கும். இந்த ஆண்டு சாதனை ஆண்டாக 31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. முன்பு 23 லட்சம் டன் தான் அதிகளவாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

இப்போது கொள்முதலில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறோம்.முன்பு அதிகபட்சமாக 1808 கொள்முதல் நிலையங்கள் தான் இருந்தன. ஆனால் இப்போது 2132 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தேவை என்றால் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கொள்முதல் செய்த நெல்லுக்கு 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க அம்மா அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா காலத்திலும் மார்ச் 24 ந் தேதிக்கு பிறகு 11 லட்சத்து 32 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.