தற்போதைய செய்திகள்

ரேஷன் பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே நேரடியாக ரூ.1000 நிவாரண நிதி – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

சென்னை

வருகிற 22ம்தேதி முதல் 26-ம்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக ரூ.1000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது:-

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், 19.06.2020 அதிகாலை முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு, பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட மாங்காடு மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியும், அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டும் அதனை 22.06.2020 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுவீடாக சென்று வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, 22.06.2020 முதல் 26.06.2020 வரை சம்பந்தபட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலமாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணம் மேற்கூறிய நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். எனவே, 22.06.2020 முதல் 26.06.2020 வரை உள்ள நாட்களில் நியாயவிலைக் கடைகள் செயல்படாது.

மேற்கூறிய பகுதிகளில் இதுவரை ஏறக்குறைய 78 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள். மேலும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை இதுவரை பெறாத மேற்கூறிய பகுதிகளை சார்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை 27.06.2020 முதல் சம்பந்தபட்ட நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.