தற்போதைய செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் ஊழல் பெருகி விட்டது-மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு குற்றச்சாட்டு

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் ஊழல் பெருகி விட்டது என்றும், அமைச்சர் துரைமுருகன் சொல்படி தான் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.ஆர்.ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட கழக நிர்வாகிகள்
எம்.மூர்த்தி, கே.ஜெயபிரகாஷ், உமா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவருமான எஸ்.ஆர்.கே.அப்பு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் அள்ளி வீசினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும்
ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார்.
பெட்ரோல், டீசல், விவசாயிகளின் இடுபொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது.

அம்மா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் இன்று மின்வெட்டு மாநிலமாக திகழ்கிறது. மின்வெட்டு பிரச்சினையால் நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க.வினர் அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாநகராட்சியில் அமைச்சர் துரைமுருகன் சொல்படிதான் அனைத்து அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.

வேலூர் நகரை சேர்ந்த கழக தொண்டர் ஜமீல் மீது தி.மு.க.வினர் தூண்டுதலின்பேரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே பொய் வழக்கு போடுவது வாடிக்கை தான். பொய் வழக்குகளை கண்டு கழகம் அஞ்சாது.

தி.மு.க.வினரின் அடக்குமுறைகள், அராஜக செயல்களை சந்திக்க கழகத்தினர் தயாராக உள்ளனர். மாநகராட்சியில் ஊழல் பெருகி விட்டது. வேலூர் மாநகராட்சி அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி ஒருதலைபட்சமாக செயல்பட்டால் விரைவில் தலைமையிடம் அனுமதி பெற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நாளை (28-ந்தேதி) தி.மு.க. அரசை கண்டித்து வேலூர் மாநகர் முழுவதும் உரிமைக்குரல் முழக்க போராட்டத்தை

சிறப்பாக, எழுச்சியோடு கழக நிர்வாகிகள் நடத்த வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசினார்.