தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 403 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் யாருக்கு கொரோனா பாதிப்பில்லை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம், மன்னார்குடி பேருந்து நிலையம், கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொரடாச்சேரி பேரூராட்சி, நன்னிலம் பேரூராட்சி, பேரளம் பேரூராட்சி, எரவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்து, பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் உணவு வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உடனிருந்தார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என உணவறிந்து சோதனை செய்தார். தொடர்ந்து சமையலறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

உலககெங்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவை பொறுத்தவரை பிரதமரும், தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில் முதலமைச்சர் வேண்டுகோளின்படி இம்மாவட்ட மக்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் பொதுமக்கள் தங்களை சுய கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் வேலையில் பொதுமக்கள் அதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இச்சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரத்துறை, காவல் துறை, தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர் ஆகியோரின் பணிகளை பாராட்டுகிறேன். மேலும் இம்மாவட்டத்தை பொறுத்தவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் 1052 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. எத்தகைய சூழ்நிலைகளையும் கையாள்கிற வகையில் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதுவரை இம்மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து சமீபத்தில் வருகை தந்துள்ள 1900 நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் வீடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு அவர்களை மருத்துவர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகிறார்கள். இதற்கான 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 403 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகை தந்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 11 நபர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தமையால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து தடையில்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது தான்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவதுறை துணை இயக்குநர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா, நகராட்சி ஆணையர் சங்கரன், வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.