தற்போதைய செய்திகள்

மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தடுக்க நடவடிக்ைக – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க நடவடிக்ைக எடுக்கப் பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் தாராபுரம் சாலை, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அமைந்துள்ள தனிமை படுத்தப்பட்ட சிகிச்சை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்நோய் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு வகையான நடவடிக்கைகளும் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் நமது மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அடுக்குடன் சுமார் 15 படுக்கைகள் உடன் அனைத்து வசதிகளுடன் இச்சிகிச்சை பகுதி அமைந்துள்ளது.

மேலும், வார்டில் 50 படுக்கைகளும், 7 வெண்டிலேட்டர்களும், 15 மல்டிபேரா மானிட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் சிகிச்சைக்காக தனி வார்டுடன் கூடிய மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ம்தேதி முதல் பல்வேறு நாடுகளிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சுமார் 1360 நபர்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வெளி மாவட்டத்திலிருந்து நமது மாவட்டத்திற்கு வருகை புரிவதை தவிர்க்கும் வகையில் 41 சோதனைச் சாவடிகள் காவல் துறையினரால் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் இத்தகைய கால சூழ்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர தேவையில்லாமல் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் அனைத்துத்துறையும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகள் மற்றும் முகக் கவசங்களையும் அமைச்சர் ஆய்வு செய்து இப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களும் பிற துறையினரும் மற்றும் ஊடக நண்பர்களும் மிகுந்த பாதுகாப்புடனும் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்ொண்டார்.

இந்த ஆய்வின் போது, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளி; பொதுசுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.