சிறப்பு செய்திகள்

தனிமைதான் மருந்து: முதல்வர் திட்டவட்டம்

சென்னை

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில் இன்று (30.3.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு
அளித்த பேட்டி

தொடர் சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இந்தியாவிலும் இந்த நோய் பரவியிருக்கின்றது, தமிழகத்திலும் இந்த நோய் பரவியிருக்கின்றது. இன்றைக்கு உலக அளவில் 199 நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான பேர் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளார்கள். இந்தியாவை பொறுத்தவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களுடைய எண்ணிக்கை 27. தற்போது தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இறந்திருக்கிறார். இந்தியாவில் 1139 பேர் பாசிடிவ் என சோதனையின் வாயிலாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தயார் நிலையில் 17,089 படுக்கை

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் நேற்றையதினம் வரை 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது மேலும் கூடுதலாக 17 பேர் இன்றைக்கு இந்த வைரஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களையும் சேர்த்து 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில், கொரோனாவுக்கென்று அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையோடு இணைந்து 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. தனியாரையும் சேர்த்து இன்றைக்கு வென்டிலேட்டரின் எண்ணிக்கை 3018. நோயாளிகளுக்கு சோதனை செய்வதற்காக அரசும் தனியாரும் சேர்ந்து 14 மையங்களில் ஆய்வக வசதி ஏற்படுத்தியிருக்கிறோம். விரைவில் மேலும் 3 ஆய்வு மையங்கள்
ஏற்படுத்தப்பட உள்ளது.

ஆய்வக பரிசோதனை

இதுவரை விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 2,09,234. 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்த நபர்களின் எண்ணிக்கை 3,420. ஆய்வக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,981. வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை 43,537. தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் இதுவரை இருந்தவர்களின் எண்ணிக்கை 1,641. கொரோனா வைரஸ் நோய் சந்தேகிக்கப்பட்டு உள்நோயாளியாக தனிப்பிரிவில் இருந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,925. கொரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமாகி வீட்டிற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5. இதுவரை என்னுடைய தலைமையில் 8 முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றன.

பலமுறை கூடி ஆலோசனை

ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள்,டிஜிபி மற்றும் நியமிக்கப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுடைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த நோயினுடைய தடுப்புப் பணி எவ்வாறு இருக்கின்றது என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதற்கேற்றவாறு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட அவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பலமுறை கூடி ஆலோசனை செய்திருக்கின்றது. அதோடு, தலைமைச் செயலாளரும் காணொலி காட்சி மூலமாக இதுவரை 4 முறை மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியிருக்கின்றார்.

முகக் கவசங்கள்

இன்றையதினமும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய இருக்கின்றார். நானும், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு காணொலிக் காட்சி மூலம் தொடர்பு கொண்டு, மாவட்டங்களில் இருக்கின்ற நிலைமைகளைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளேன். அதோடு, அரசு ஒன்றரை கோடி என் 95 முகக்கவசம் வெளியிலிருந்து வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 25 லட்சம் என்-95 முகக்கவசம் வாங்குவதற்கும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றது. 11 லட்சம் பாதுகாப்பு கவசம் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றது. 2,500 வென்டிலேட்டர் புதிதாக வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. 30,000 டெஸ்ட் கிட் வாங்குவதற்கு அரசால் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் 121 டெஸ்ட் மாதிரி வர இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 11 குழுவும் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பணியை நாங்கள் வரையறை செய்து கொடுத்திருக்கின்றோம். அந்தப் பணியை அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், இந்த நோய் தடுப்புப் பணி வேகமாக, விரைவாக செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றது

11 குழுக்களின் பணிகள்

குறிப்பாக சொல்லவேண்டுமென்று சொன்னால், முதல் குழு – மத்திய அரசு மற்றும் பிற மாநில தொடர்புகள், மத்திய தகவல் மையம். ஆகியவற்றையும் இரண்டாவது குழு – மருத்துவ உபகரணம் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் தொழிற்சாலை உற்பத்தி, மாநிலத்திற்கிடையேயான நகர்வையும், மூன்றாவது குழு -மாநில மாவட்ட அளவில் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி,நகர்வு, விநியோகத்தையும், நான்காவது குழு – செய்தி ஒருங்கிணைப்பையும்,ஐந்தாவது குழு – தனியார் மருத்துவனைப் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் தொற்றுநோய் கண்காணிப்பையும், ஆறாவது குழு – போக்குவரத்து வசதிகயையும்,ஏழாவது குழு – நோயாளியுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிதல்,தனிமைப்படுத்துதல், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வாங்கி விநியோகம் செய்யும் பணியையும்,எட்டாவது குழு – நோய் தடுப்பு, மருந்து தெளித்தல் பணியையும், ஒன்பதாவது குழு – நிவாரண ஒருங்கிணைப்பு, தன்னார்வக் குழுக்களை ஒருங்கிணைத்தல், தனிமைப்படுத்தல் குழுவிற்கு உதவுதல் போன்ற பணிகளையும், பத்தாவது குழு – வெளி மாநில தொழிலாளர் மற்றும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளி மாநிலத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடைய விவரங்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பணியையும், பதினொன்றாவது குழு – முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு உதவி கோருதல், முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்தல், அவர்களுக்கு உணவு வழங்குதல், மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளை இந்தக் குழுக்கள் மேற்கொள்ளும். இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக இந்த 11 குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழு அமைக்கப்பட்டதன் காரணமாக, தமிழகத்தில் இந்த நோய் தடுப்புப் பணி மிக வேகமாக, துரிதமாக இன்றைக்கு செயல்பாட்டில் வந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாசிட்டிவ் வந்தால் தனிமைப்படுத்தப்படும்

கேள்வி: மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் ஆய்வகங்கள் அதிகமாக
உள்ளன, ஆனால் பரிசோதனை குறைவாக உள்ளதே?

பதில்: அறிகுறி இருந்தால்தான் நாம் டெஸ்ட் செய்ய முடியும். நம்முடைய அறிவிப்பே என்ன? பாரதப் பிரதமரும் சரி, மத்திய சுகாதாரத் துறையும் அறிவிப்பு கொடுத்தது என்னவென்றால், யாருக்கு அறிகுறி உள்ளதோ, அவர்களுக்கு இந்த டெஸ்ட் செய்ய வேண்டும் என்பதுதான். அந்த டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1981 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 14 ஆய்வகங்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும் 3 கேட்டிருக்கின்றோம், அதற்கும் அனுமதி கிடைத்துவிடும். ஆகவே, 17 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.ஆகவே, யார் யாருக்கெல்லாம் அறிகுறி இருக்கின்றதே, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சைகள் செய்யப்படும்.

144 தடை உத்தரவு

கேள்வி: வெளியூர் செல்வதற்கு அனுமதி பெறுவதில் சிரமம் உள்ளதே?

பதில்: ஒன்று குடும்பத்தில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் துக்க காரியங்களுக்கு செல்லலாம். ஏற்கனவே திருமணம் ஏற்பாடு செய்திருந்து,திருமணம் நடந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும். இரண்டாவது,குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால் அனுமதி கொடுத்திருக்கிறோம். மற்ற எதற்கும் கிடையாது. எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறோம். அந்தந்த மாவட்டத்தில் வட்டாட்சியரிடத்திலேயே அனுமதி பெற்றுக் கொள்ளலாம். எல்லோரும் வெளியே செல்ல வேண்டுமென்றால், அதற்கு 144 தடை உத்தரவு போடவேண்டிய அவசியமே இல்லை.

தொற்றுநோய் ஒரு கடுமையான நோய்

கேள்வி: காய்கறி, மளிகை கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு எந்த அளவு
கடைபிடிக்கப்படுகிறது?

பதில்: நாங்கள் ஒரு சட்டத்தை போட்டிருக்கிறோம். இந்த சட்டம் மக்களுக்கு எந்த அளவில் நன்றாக இருக்கிறது என்று ஊடக நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.தற்போதுள்ள தொற்றுநோய் ஒரு கடுமையான நோய் என்று தொலைக்காட்சி,பத்திரிகைகள் மூலமாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் மக்களுக்கு இந்த நோயைப் பற்றிய முக்கிய தகவல்களையெல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் வாகனத்தில் ஒலிபெருக்கியின் மூலமாக இந்த நோயின் தாக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறி வருகிறோம், பத்திரிகை வாயிலாகவும் தெரிவிக்கிறோம். நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோய்க்கு மருந்தே தனிமை தான். தனிமையில் இருந்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். இரண்டாம் நிலைக்கு வந்திருக்கிறது. ஆகவே, இந்த நிலையிலேயே இந்த நோய் மேலும் பரவாமல் நாம் கட்டுப்படுத்திவிட்டால், நமக்கு எந்தப் பிரச்சினையும் எழாது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு மூலமாகவும், நோட்டீஸ் அடித்தும், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டும் ஒவ்வொரு வீடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் ஒத்துழைப்பு முக்கியம்

எவ்வளவு தான் சட்டங்கள் போட்டாலும், மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடுமையான சட்டம் என்பது மக்களை துன்புறுத்தவதற்கு அல்ல,விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்குத் தான். அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது, அதை அனைவரும் மதிக்க வேண்டும். நம் மாநிலத்தைப் பொறுத்தவரைக்கும், நம் நாட்டை பொறுத்தவரைக்கும் மக்கள் தொகை நிறைந்த மாநிலம், மக்கள் தொகை நிறைந்த நாடு. இதுவரை, இதுபோன்ற சம்பவத்தை நாம் சந்திக்கவேயில்லை, இது ஒரு சவாலான நேரம். இந்த நேரத்தில் படிப்படியாகத்தான் மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு வர முடியும். அந்த நிலையில், தமிழகத்தை பொறுத்தவரைக்கும் மற்ற மாநிலங்களை விட மக்களின் ஒத்துழைப்பு ஓரளவு இருக்கின்றது, இன்னும் படிப்படியாக மக்களுடைய ஒத்துழைப்பைப் பெற்று, இந்த நோய் பரவுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் அரசு எடுத்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு

கேள்வி: அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ரூ.1000 எந்த முறையில்
வழங்கப்பட உள்ளது?

பதில்: இன்றைக்கு அனைத்து மாவட்டங்களிலுமே அந்தந்த அமைச்சர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. இன்றைக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக மக்களுக்கு பொருட்களை எப்படி விநியோகிப்பது, குடும்பத்திற்கு 1000 ரூபாய் அரசு அறிவித்திருக்கின்றது, அதை எப்படி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற விவரங்களையெல்லாம் தெளிவாக முடிவெடுத்து அறிவிக்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறோம்.

நிலவேம்பு கஷாயம்

கேள்வி: நிலவேம்பு கஷாயம் போன்று வேறு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படுமா?

பதில்: இது மிகப் பெரிய தொற்று நோய், இந்த நோய்க்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகளே சரியான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. சளி, இருமல், காய்ச்சல் வருகின்றபொழுது அறிகுறி தென்படுகிறது, அப்படி அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுகவேண்டும் என்று பத்திரிகை வாயிலாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிக்கின்றோம், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமாக நோயின் அறிகுறிகள் தொடர்பாகவும், அறிகுறி வந்தால் என்ன செய்யவேண்டும் போன்றவற்றையெல்லாம் மக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம். அதேபோல அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கின்றோம், தொற்று நோய் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாவட்ட எல்லைகள் மற்றும் மாநில எல்லைகள் மூடப்பட்டிருக்கின்றன. காய்கறிகள், பழங்கள் கொண்டுவரும் வண்டிகளுக்கெல்லாம் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது, அந்த வண்டியின் டிரைவர் மற்றும் கிளீனருக்கு கிருமி நாசினியை கொடுத்து கைகளை சுத்தம் செய்துகொள்ளச் சொல்கிறோம். அத்தியாவசியமான பொருட்களான பருப்பு, புளி,எண்ணெய் போன்றவை மற்ற மாநிலங்களிலிருந்தும் நம் மாநிலத்திற்கு கொண்டுவர
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்துக்கட்சி கூட்டம்

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்
என்று கூறியுள்ளாரே?

பதில்: எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்துவதற்கு இதில் ஒன்றும் கிடையாது. இதில் எல்லோரும் இதைப் பற்றித் தான் பேசப் போகிறோம். இதில் வேறு ஒன்றும் பேசப் போவதில்லை. நோய்வாய்பட்டவர்களை குணப்படுத்துவற்கு
தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும், நோய் தொற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், இது எல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கோ, அரசியல் செய்வதற்கோ அவசியமில்லை.

நிதி வந்து கொண்டே உள்ளது

கேள்வி: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது?

பதில்: முதலமைச்சர் பொது நிவாரண நிதி வந்து கொண்டே இருக்கிறது. இன்றைக்கு கூட பத்திரிகையிலே விளம்பரம் கொடுத்திருக்கின்றோம். பலர் நிதி கொடுக்க முன் வருகிறார்கள். பலர் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருளாகவும் கொடுக்கிறார்கள். சென்னையில் 20 முகாம்கள் இருக்கின்றன. வெளிமாநிலத்தில் இருந்து இங்கே தங்கி இருப்பவர்களுக்கு, உணவு, மருந்து வசதிகளை செய்து கொடுக்கிறோம். எல்லா மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து பணிபுரிபவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே இருக்கின்ற முதியோர்களுக்கு ஏற்கனவே அங்கன்வாடியில் உணவு கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆதரவற்ற முதியோர்கள் இருந்தால் சத்துணவுக்கூடங்கள் மூலமாக சமையல் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் யாராவது இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து ஏற்பாடுகளையும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் ஈரோட்டில் 10 பேர், சென்னையில் 5 பேர், மதுரையில் 1, கரூர் 1 (திருவாரூரில் பரிசோதனை செய்யப்பட்டது) என 17 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி

கேள்வி: ஒரே நாளில் 17 அதிகரித்துள்ளதற்கு என்ன காரணம்?

பதில்: ஒரே நாளில், 17 நபர்களுக்கு கொரோனா தொற்றுநோய் அறிகுறி இருப்பதற்குக் காரணம், டெல்லிக்கு 1500 பேர் கொண்ட குழுவாக சென்றிருக்கிறார்கள். அந்தக் குழுவில் சென்றவர்களுக்குத் தான் இந்ததொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஈரோட்டில் 24 பேருக்கு இருக்கிறது.அதேபோல, இந்த குழுவில் சென்ற 1500 பேரில் 981 பேர் வந்துவிட்டார்கள்,இன்றைக்கு அந்த 981 பேரையும் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழுவில் இடம் பெற்று சென்றவர்களால் தான் இவ்வளவு தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

போதுமான முகக் கவசம்

கேள்வி: போதுமான அளவு முகக் கவசம் உள்ளதா?

பதில்: கொரோனா தடுப்புப் பணிகளுக்கான எல்லா பொருட்களும் இருப்பு இருக்கிறது. இது சீனாவில் ஏற்படும் போதே நாம் இந்த பொருட்களை இருப்பு வைத்து விட்டோம், மற்ற மாநிலங்களைப் போல் அல்ல. நம் மாநிலத்தில் முகக்கவசங்கள் தேவையான அளவிற்கு வைத்திருக்கின்றோம். நீங்கள் சொன்னதைப் போல என்-95 மாஸ்க் இப்போது ஆர்டர் கொடுத்திருக்கின்றோம். இப்பொழுது நம்மிடம் தேவையான அளவிற்கு இருக்கிறது. இருந்தாலும் கூடுதலாக 25 லட்சம் என்-95 முகக்கவசங்கள் ஆர்டர் கொடுத்திருக்கின்றோம்.

வெளி மாநில தொழிலாளர்கள்

கேள்வி: பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுமென நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள், அதேபோன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளி மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்த மாநில அரசுகள் மூலம் தேவைப்படும் உதவிகளை செய்ய நீங்கள் கேட்டுக்கொண்டுள்ளீர்களா?

பதில்: வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நாம் என்னென்ன உதவிகளை செய்தோமோ, அதே உதவியை மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். அதற்குண்டான செலவை நம் மாநில அரசு கொடுக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றோம். இன்றைக்கு மகாராஷ்டிராவில் 600 பேர் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அந்த மாநில முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள், என்ன செலவாகிறதோ அதை நாங்கள் கொடுக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றோம்.

மாநில எல்லைகளை மத்திய அரசு சீல் வைத்து விட்டது. மாநிலம் விட்டு மாநிலம் வர முடியாது. இது பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது. உங்களுக்கு நன்றாக தெரியும். இன்றைக்கு ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வருவதற்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஆகவே, அந்தந்த மாநிலத்தில் இருக்கின்ற தொழிலாளர்கள், தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு தொழில் செய்ய போனவர்களுக்கு, அங்கேயே அவர்களுக்கு தேவையான வசதிகளை அந்த மாநிலமே செய்து கொடுக்கும். இதை மத்திய அரசும் தெளிவுப்படுத்தி விட்டது. நம் மாநிலத்தை பொறுத்தவரைக்கும்,வெளிமாநிலத்தில் இருக்கின்ற தொழிலாளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர். அதில் கட்டுமானப் பணியில் இருப்பவர்கள் 32,469 பேர். இதில் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த நிறுவனமே அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறது. மத்திய அரசாங்கம் அறிவித்தபடி அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ வசதிகளை அவர்களே செய்கிறார்கள். தினக்கூலி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கிறோம்.

அரசு அனைத்து உதவியும் செய்யும்

கேள்வி: மின் கட்டணம் ரத்து செய்யப்படுமா?

பதில்: அரசாங்கத்தினுடைய நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து வருகின்ற பணத்தில் தான் அரசாங்கம் செலவு செய்கிறது.அரசாங்கத்திற்கு என தனியாக பணம் வருவதில்லை. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு இது நன்றாக தெரியும். ஆகவே, இருக்கின்ற நிலைமைக்கு தக்கவாறு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இவ்வாறு தெரிவித்தார்.