தற்போதைய செய்திகள்

கழகத்தை மிரட்டும் சக்தி எந்த கட்சிக்கும் கிடையாது – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் ஆவேசம்

திண்டுக்கல்,

கழகத்தை மிரட்டும் சக்தி எந்த கட்சிக்கும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் கே.எஸ்.என். வேணுகோபால் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. 5 ஆண்டுகள் மட்டும் அல்ல 50 ஆண்டுகள் ஆனாலும் அவர்களால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவோம் என்றார்கள், வழங்கவில்லை. நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம். அதற்கான முதல் கையெழுத்தை போடுவோம் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது .ஆனால் ஒரு பொய்யை பலமுறை சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில் அறிவித்தார்கள். ஆனால் கூறியபடி செய்தார்களா?
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். அதன் விலையை குறைப்பதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் கொடுத்த வாக்குறுதி படி குறைத்தார்களா? இல்லவே இல்லை.
அதேபோல் கல்விக்கடனை ரத்து செய்வோம் என கூறி மாணவ சமுதாயத்தை ஏமாற்றி உள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை ரத்து செய்வோம் என கூறி அவர்களையும் ஏமாற்றியுள்ளனர்.

தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அடுத்து உறுதியாக 100 சதவீதம் கழகமே ஆட்சியமைக்கும்.

தமிழகத்தில் தி.மு.க.வின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. அது அக்கட்சியின் பிறவிக்குணம். பழிவாங்கும் நடவடிக்கையாக கழகத்தினர் மீது வழக்குகள் போடுவார்கள். ஆனால், அதனை எல்லாம் எதிர்கொண்டு வீறுநடை போடும். தைரியமும், வீரமும் கழக நிர்வாகிகளுக்கு உள்ளது. தி.மு.க.வை எதிர்ப்பதற்கு தயக்கம் தேவையில்லை. கழக நிர்வாகி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவருக்கு மாவட்ட கழகம் முழுவதும் துணையாக நிற்கும். கழகத்தை மிரட்டவோ, உடைக்கவோ யாராலும் (எந்த கட்சிக்கும்) முடியவே முடியாது.

தலைமை கழகம் அறிவித்துள்ளபடி 28-ந் தேதி (நாளை) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஆர்ப்பாட்டத்தை ஒவ்வொருவர் வீட்டு முன்பாக நடத்தி நமது கண்டனத்தை தி.மு.க.வுக்கு தெரிவிப்போம்,

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.