தற்போதைய செய்திகள்

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவு – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்று நோய் பாதிப்பு குறைந்துள்ளது என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி நகராட்சி பகுதிக்குட்பட்ட 27 வார்டுகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பார்வையிட்டு துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கிருமிநாசினி தெளிப்பு கருவியை கொண்டு வீதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பு கிருமிநாசினி மருந்தை நகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அடித்தார்.

இதன் பின்னர் முக கவசம் இல்லாமல் வெளியே பொதுமக்கள் வந்தவர்களுக்கு முகக் கவசம் அணிவித்தும், வழங்கியும் முகக் கவசங்கள் இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். அமைச்சர் கே.சி.கருப்பணன் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்த்த அப்பகுதி மக்கள் வியந்தும், நோய் தடுப்பின் அவசியத்தையும் உணர்ந்தனர்.

இதன்பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கொரோனாவால் பாதிப்பு குறைவான அளவு நிகழ்ந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் உலகத்தில் எந்த பகுதியில் தமிழர்கள் சிக்கி தவித்து வந்தாலும் அவர்களை மீட்டு எடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கராத்தே பெரியசாமி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.