தமிழகம்

சென்னையில் ரெட் அலர்ட் எதையும் விடுக்கவில்லை – சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை

சென்னையில் ரெட்அலர்ட் எதையும் விடுக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சோதனை நடக்கிறதே தவிர சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி அண்ணாநகர் மண்டலத்திலுள்ள அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 5 நபர்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் 2 நபர்களுக்கும்,தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம் பகுதி,அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் தலா ஒரு நபர் என மொத்தம் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் சோதனை நடக்கிறதே ஒழிய சென்னையில் சில பகுதிகளில் ரெட்அலர்ட் எதுவும் மாநகராட்சி விடுக்கவில்லை. பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பீதியடைய வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.