தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் நோய் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அலுவலர்களுக்கு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவுறுத்தல்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்புப்பணிகள் குறித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண உதவி தொகை வழங்குதல் குறித்தும் முக்கிய அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், அங்கன்வாடி பணியாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோரை கொண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வுப் பணிகள், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண உதவித்தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2020 மாதத்திற்காக அத்தியாவசிய பொருள்கள் விலையில்லாமல் நியாயவிலை கடைகளில் 2.4.2020 முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இச்சமயத்தில் பொதுமக்கள் அதிமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர் அவர்களுக்கு குறிப்பிட்ட அந்த நேரத்தில் வந்து பொருட்களையும் ரூபாய் 1000 நிவாரண உதவிதொகையையும் பெற்று கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான முக கவசம், கையுறை, பாதுகாப்பு காலணி வழங்கப்பட்டு பாதுகாப்பாக தூய்மைபணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் குறித்து அதிக பயம் காரணமாக சாதாரண சளி காய்ச்சலுக்கு பயப்படும் சூழ்நிலையில் இருப்பதால் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் எடுத்துரைத்து பொதுமக்கள் அச்சம் போக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் மூலம் 18 தீயணைப்பு வாகனங்களையும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வண்ணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், வீடற்றவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பசியாற உணவு கிடைக்கும் வண்ணம் சமுதாய சமையற்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தற்போது உள்ள சூழ்நிலையில் பொதுமக்களுக்கு அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எவ்வித தங்குதடையின்றி நியாயமான விலையில் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் சமூக இடைவெளியில் நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வதற்கு ஏதுவாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதை அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 24X7 என்ற முறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள கட்டமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தேவையான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூ.பெருமாள், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்(சாத்தூர்), மு.சந்திரபிரபா (திருவில்லிப்புத்தூர்) சார் ஆட்சியர் (சிவகாசி) ச.தினேஷ்குமார், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மா.வசந்தி, மாவட்ட ஊராட்சி குழுத்துணைத்தலைவர் ஆர்.சுபாஷினி, மண்டல அவசரநிகழ்வு மேலாண்மை அலுவலர்களும் உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.