தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க வருமுன் காப்போம் என்ற வியூகத்தை வகுத்து முதலமைச்சர் செயல்படுகிறார்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சென்னை

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு வருமுன் காப்போம்எனும் வியூகத்தை வகுத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் 25 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரகுடிநீர் சூரண சித்த மருந்து மற்றும் ஹோமியோபதி மருந்து ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் திரைப்பட நடிகரும், இயக்குநரும், கழக நட்சத்திர பேச்சாளருமான ரவிமரியா ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருவாய் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இந்தநாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள், ஏனென்றால் புரட்சிதலைவரையும், புரட்சித்தலைவியையும் தந்த கலைதுறையில் உங்களுடன் நான் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். என்னை போன்ற கடம்பூராரை போன்றசாமானியர்களும் பொதுமக்களுக்கு பணியாற்றக்கூடிய அதிகாரத்தை தந்தவர்அம்மா அவர்கள், அந்த வகையில் உங்கள் முன் நின்று இன்று பேசிகொண்டிருக்கிறேன். புரட்சி தலைவர்,புரட்சி தலைவி அம்மா விட்டு சென்ற பணிகளை இவர்கள் தொடரமுடியுமா என இந்தியா முழுவதும் கேள்வி எழுந்த நிலையில், விவசாயியாக எளிய குடும்பத்தில் பிறந்து 45 ஆண்டுகள் தனது அரசியல், பொது அனுபவத்தால் முதலமைச்சர் திறம்பட செயல்பட்டு, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, விட்டு சென்ற பணிகளை செய்து வருகிறார்.

திறமையுள்ளவர்கள் முன்பு தான்சவால்கள் வந்து நிற்கும் என்பார்கள், அந்த வகையில் முதலமைச்சராக எடப்பாடியார் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை எண்ணற்ற சவால்களை சந்தித்து அதனை திறம்பட எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகிறார். துணைமுதல்வரும் அவருடன் ஒற்றுமையுடன் பணியாற்றி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் 1 கோடியே 17 லட்சம் பேருக்கு இந்த கொரோனா தொற்றுபாதித்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கும் பணியில் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆரம்பநிலையிலே இந்த தொற்றை கண்டறிந்து விட்டால், எளிதில் இதில் இருந்துமக்களை காப்பாற்றி விடலாம் என்ற மருத்துவதுறையின் அறிவுரையின்படி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு நாளென்றுக்கு 35 ஆயிரம்மருத்துவ பரிசோதனை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்கும் வகையில் வருமுன் காப்போம் என்ற வியூகத்தின் அடிப்படையில் முதலமைச்சர் தற்போது களப்பணியாற்றி வருகிறார். அந்த வகையில் மக்களுக்கு சத்து மாத்திரைகள், ஜிங்மாத்திரைகள், ஹோமியோபதி, கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கி அதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவகையில் மக்களை தமிழக முதலமைச்சர் , இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.

மத்திய அரசின் வழிகாட்டுதலோடு 6 முறை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் உயிர் காக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த பொதுமுடக்கத்தால் பெருளாதாரம், வளர்ச்சி என பலவற்றை நாம் இழந்தாலும், அவற்றை எல்லாம் நாம் உழைப்பால் திரும்ப பெற்றுவிட முடியும். உயிரை இழந்தால் அதனை மீண்டும் பெறக்கூடிய விஞ்ஞானம் நாம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. அதனால் தான் மக்களின் உயிரை காக்கும் பொருட்டு தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதே போன்று திரைத்துறையினருக்கும் தோள் கொடுத்து துணை நிற்க அம்மாவின் அரசு, முதலமைச்சர் உள்ளிட்ட நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். அந்த வகையில் தான் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கபசுர குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகளை வழங்குகிறோம். இதனை உட்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதோடு, சமூக இடைவெளி, முககவசம், கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற அரசின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சாமிநாதன், திரைப்பட நடிகரும், இயக்குநரும், கழக நட்சத்திர பேச்சாளருமான ரவிமரியா, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.