தமிழகம்

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை – தமிழக அரசு உத்தரவு

சென்னை

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள தாவது:-

தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு பொருட்களை வழங்க ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், அலுவலக வேலை நேரத்தைத் தாண்டியும், விடுமுறை நாளிலும் பணியாற்றுகிறார்கள்.

மேலும், நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவக்கூடிய சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து அரசு உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்களையும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக ஒரு நேர சிறப்பு ஊக்கத் தொகையை வழங்கலாம் என்று அரசை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அவரது அதிகாரத்தின் கீழ் வரும் ரேஷன் கடை விற்பனையாளருக்கு ரூ.5 ஆயிரமும், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கும்படி கூறியுள்ளார். 21 ஆயிரத்து 517 விற்பனையாளர்கள், 3,777 பாக்கெட் கட்டுவோருக்கு இந்த ஊக்கத் தொகை வழங்க ரூ.12.27 கோடி செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அரசு கவனமாக பரிசீலித்து,விற்பனையாளர் களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கலாம் என்று அரசு அனுமதி அளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.