தற்போதைய செய்திகள்

பிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

பிறமாநிலங்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு, இருப்பிடம் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் ஒன்றியம் மற்றும் குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நேற்று வீடுகள் மற்றும் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி வீதி,வீதியாக நகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமாரபாளையம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நான் நேரடியாகச் செல்லும் போது பொதுமக்கள் தங்களது குறைகளை கூறுவதற்கும் அவற்றைக் களைவதற்கும் வய்ப்பாக உள்ளது. பொதுமக்களைப் பொறுத்தவரை இந்த வைரஸ் முழுமையாக தாக்காமல் இருக்க தமிழக முதலமைச்சர் கூறியதுபோல் நமக்கு நாம் கட்டுப்பாடாக இருப்பது தான் இதற்கு முக்கியமாகும்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வீட்டிற்குள்ளேயே இருந்தால் முக்கியமாக இதை தடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.ஏப்ரல் 14-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு மின்தடை மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு இருக்காது. காசிக்கு புனித யாத்திரை சென்ற குமாரபாளையத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு தங்குவதற்கு இடவசதியும் உணவும் தமிழக அரசால் செய்து தரப்படும்.

அவர்களுக்கும் பிற மாநிலத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தங்குவதற்கும், உணவு ஏற்பாடு செய்வதற்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டு உள்ளார். 9443943699 எண்ணில் அவரை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.