சிறப்பு செய்திகள்

ஸ்டாலின் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

கரூர்

நான் விவசாயி என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஸ்டாலின் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: நீங்கள் ஒரு விவசாயியே இல்லை, விவசாயியாக இருந்தால் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள் என்று ஸ்டாலின் கூறுகிறாரே?

பதில்: அவர் சொல்லி நான் விவசாயியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. விவசாயி என்று எனக்குத் தெரியும், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியும், நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர் ஒன்றும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், விவசாயியாக இருந்தால்தானே அவருக்குத் தெரியும்.

கேள்வி: விவசாயியாக இருந்தால், விவசாய மசோதாவிற்கு எதிராக ராஜினாமா செய்ய வேண்டும் என்று …

பதில்: நான் ஏற்கனவே பலமுறை கேட்டுவிட்டேன், ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களைப் பார்த்துக் கேட்கின்றேன். மத்திய அரசு கொண்டுவந்த இந்த மூன்று சட்டங்களால் விவசாயிகள் எப்படி பாதிக்கிறார்கள்? இப்போதுகூட, கரூர் மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற்றது. என்னுடைய அழைப்பை ஏற்று, கரூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

எல்லா விவசாயிகளும் பாராட்டிப் பேசினார்கள். இந்த மூன்று சட்டங்களின் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களா? எங்கேயோ உள்ள விவசாயிகள், அங்கிருக்கின்ற ஏஜெண்ட்டுகள் பயன்பெறுவதற்காக, இங்கே இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகளை மையமாக வைத்து அரசியல் நாடகமாடிக் கொண்டிருக் கின்றார்கள். வருகின்ற தேர்தலை அவர்கள் மனதில் வைத்து இப்படிப்பட்ட சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள், எல்லா விவசாயிகளுக்கும் நன்றாகத் தெரியும். பலமுறை நான் இந்த மூன்று சட்டங்களைப் பற்றி விளக்கிப் பேசிவிட்டேன். விவசாயப் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டத்தில் கூட இதைப்பற்றி விளக்கிப் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு விவசாயிகளெல்லாம் இந்த சட்டத்தைப் வரவேற்கிறார்கள்.

அங்கெல்லாம், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை ஏஜெண்ட் மூலமாகத்தான் விற்பனை செய்ய முடியும். அந்த ஏஜெண்ட்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏஜெண்டுகளுக்குத் துணையாகத்தான் இங்கிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், விவசாயிகளுக்காக அல்ல.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.