சிறப்பு செய்திகள்

அரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி

சென்னை
அரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (1.4.2020) சென்னையில் அம்மா உணவகங்களை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவு கொடுப்பதற்காக அம்மா உணவகத்தைத் திறந்து வெகு சிறப்பாக இன்றைக்கு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. வேலைக்கு செல்கின்றவர்கள், ஏழை மக்கள் மலிவு விலையில் உணவை வாங்கி உண்ணுவதற்காக அம்மா கொண்டு வந்த உன்னதமான திட்டம் இந்தத் திட்டம். இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், அம்மா உணவகத் திட்டம் சிறப்பான திட்டம் என்று, இன்றைக்கு பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தியிருக்கிறார்கள். அப்படி உன்னதமான திட்டம் இன்றைக்கு மக்களுக்கு கை கொடுக்கிறது. இன்றையதினம், உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் கடுமையாக பாதிக்கப்பட்டு, சுமார் 199 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கிறது, தமிழகத்திலும் பரவியிருக்கிறது. நேற்று இரவு வரை 124 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அம்மா உணவகம்

கேள்வி: அம்மா உணவகத்தில் வழங்குகின்ற உணவுகளை இலவசமாக கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை இருக்கிறதே?

பதில்: மலிவு விலையில் தானே உணவு இருக்கிறது. இப்பொழுது 1 ரூபாய்க்கு இட்லி தருகிறோம். இந்தியாவிலேயே 1 ரூபாய்க்கு 1 இட்லி கொடுத்து தமிழ்நாடு, அதற்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டு இருக்கிறது.

கேள்வி: இப்போதைய சூழ்நிலையில் அம்மா உணவகத்தைத் தான் எல்லோரும் நம்பியிருக்கிறார்கள். இப்பொழுது திறந்திருக்கும் ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே?

பதில்: எவ்வளவு உணவு வேண்டுமென்றாலும் அம்மா உணவகத்தில் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் உணவு தயாரிப்பதற்கு அரசால் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகத்தின் மூலமாக மக்களுக்கு எளிதாக மலிவான விலையில் உணவு கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற உணவகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அதிக விலைக்கு உணவுகளை எப்படி விற்க முடியும்? பார்சல் பெறுவோர்கள் பெற்றுக் கொள்ளலாம். உணவகம் எங்கும் திறக்கவில்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

கேள்வி: இஎம்ஐ வசூல் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டும், வங்கிகளிலிருந்து நுஆஐ கட்ட மெசேஜ் வருகிறதே?

பதில்: நேற்றைய தினம் எங்களுடைய நிதித்துறை செயலாளரும் வங்கி உயர் அதிகாரிகளும் பேட்டியே கொடுத்தார்கள். அவர்கள் தான் வசூல் செய்கிறார்கள், அவர்களே பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதனால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு போகிறோம். ஏற்கனவே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது, மத்திய அரசும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இருந்தாலும், நீங்கள் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தப்படும்.

தானாக முன்வரவேண்டும்

கேள்வி: டெல்லியில் ஜமாத் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் பங்கு பெற்றார்கள். அதில் கிட்டத்தட்ட 500 பேரை கண்டுபிடித்து விட்டார்கள், மற்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

பதில்: நேற்றைய தினம் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், ஊடகத்தின் வாயிலாக சுகாதாரத் துறை செயலாளர் பேட்டியில் இதுகுறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். சுமார் 1500 பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1331 பேர் என்று கருதுகிறேன், அவர்கள் கலந்துகொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் டெல்லியிலேயே இருக்கிறார்கள். கலந்து கொண்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 515 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் அந்த சோதனைகளில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு பாசிட்டிவ் முடிவு வந்திருக்கிறது. அதனால் ஏனைய நபர்கள் தானாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், அவர்களுடைய விலாசம் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே, நேற்றைய தினம் சுகாதாரத் துறை செயலாளர் ஒரு வேண்டுகோளாக வைத்திருக்கிறார். இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டிலுள்ள பலர் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த நோயினுடைய தாக்கத்தை அறிந்து, தாங்களாக முன்வந்து அரசிற்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். பலர் குணமாய் கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகும் சூழ்நிலை இருக்கிறது. அதைத்தான் நமது சுகாதாரத் துறை செயலாளர் ஊடகம் மற்றும் பத்திரிகையின் வாயிலாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

அனைவருக்கும் பரிசோதனை

கேள்வி: கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு பாதிப்பு இருப்பது போலவே
21-ஆம் தேதி ஈஷாவில் கூட கூட்டம் நடந்திருக்கிறது, பலபேர் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள். ஈஷா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை ஆய்விற்கு உட்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அறிகுறி இருந்தால் வாய்ப்பு இருக்கிறது. அறிகுறி இருக்கின்ற காரணத்தால் தான் இவர்களுக்கு சோதனை நடத்துகிறார்கள், அறிகுறி இல்லாமல் எதையும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு மேல் தகவலின் அடிப்படையில் வீடு வீடாக சென்று 1 லட்சம் வீடுகளுக்கு மேலாக நம்முடைய அதிகாரிகள் சென்று சோதனை செய்திருக்கின்றார்கள். இதுபோல், இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்கிறோம். அந்த பரிசோதனையில் பாசிட்டிவ்வாக-ஆக வந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். இது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் திருக்கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசாலும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த இடங்களெல்லாம் அதிகமான கூட்டம் கூடுகின்ற இடங்களாகும். அதனால் பலருக்கு இந்த தொற்று வந்துவிடும் என்ற காரணத்தினால் தான் அனைத்து மதம் சார்ந்த கோவில்களும் மூடப்பட வேண்டுமென்று அரசால் உத்தரவிட்டு மூடப்பட்டிருக்கின்றது. நீங்கள் தகவல் சொன்னால் அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதுமட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தகவலையையும் எடுத்திருக்கிறோம். அவர்கள் வெளிநாட்டவர்களானாலும் சரி அல்லது தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களானாலும் சரி, அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தேவைப்படும்போது

கேள்வி: மருத்துவமனைகள் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் உட்பட தனியார்கள் தங்களுக்கு செந்தமான இடத்தை கொடுக்கிறார்கள், அலுவலகத்தை கொடுக்கிறார்கள், அதை பயன்படுத்த அரசு முன்வருமா?

பதில்: அந்த அளவிற்கு இன்னும் தேவைப்படவில்லை. நாம் 17,000 படுக்கைவசதிகள் செய்து கொடுத்திருக்கின்றோம். 17,000 பேர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது அதையும் நாங்கள் பயன்படுத்தி கொள்வோம்.

கேள்வி: ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடருமா?
பதில்: மத்திய அரசு 14-ஆம் தேதி வரை அறிவித்திருக்கிறது. அதற்குப் பிறகு மத்திய அரசு தான் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யும்.

சட்டத்தை மக்கள் மதிக்கவேண்டும்

கேள்வி: 144 தடை உத்தரவு முதல் மூன்று நாட்கள் மக்கள் நல்ல முறையில் கடைப்பிடித்தார்கள். தற்போது அந்த கட்டுப்பாடுகள் குறைந்துள்ளதா?

பதில்: ஊடகமும் பத்திரிக்கையும் தான் சொல்கிறீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், மருத்துவமனைகளுக்கு போக முடியவில்லை என்றும் சொல்கிறீர்கள். இப்படி நீங்களே தான் கேள்வியும் கேட்கிறீர்கள், நீங்களே தான் பதிலும் சொல்கிறீர்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். பொதுமக்களுடைய நலன் கருதி அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, 144 தடை உத்தரவை பிறப்பித்தோம். ஒவ்வொருவடைய உயிரும் மிக முக்கியம். எல்லாருமே இதில் பங்கு கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட ஒருவருடைய விஷயம் அல்ல. ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், நான் உட்பட, அமைச்சர் அண்ணன் ஜெயக்குமார் உட்பட, அனைத்து அதிகாரிகள் உட்பட, பணி செய்கின்ற பணியாளர்கள் உட்பட, ஒட்டுமொத்த மக்களும் இதில் ஒன்று கூடினால் தான் இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும், பரவுவதை தடுக்க முடியும். தனி ஒருவரால் அல்ல. அரசாங்கம் சட்டம் போடலாம். அந்த சட்டத்தை மதித்து மக்கள் நடக்க வேண்டும். நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சட்டத்தையே போட்டு இருக்கிறோம். இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த நோயின் தாக்கத்தை பற்றி தெரியாமலேயே மக்கள் பரவலாக வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள். நோய்வாய்பட்டவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றாக தெரியும். வெளிநாட்டில் இருக்கின்ற பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே துடிதுடிக்கின்ற காட்சியை எல்லாம் பார்க்கின்றோம். சுமார் 42 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக இன்றைக்கு ஊடக செய்தியில் பார்த்தோம். இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்ற இந்த சூழ்நிலையிலே, அரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம். அதன் அடிப்படையில் தான் 144 தடை உத்தரவை போட்டு இருக்கின்றோம். பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடியும் , இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களில் இருக்கின்ற பொதுமக்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றார். தமிழ்நாடு அரசும், மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அதேபோல, மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.

கேள்வி : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக ஒரே நாளில் அதிகரித்து இருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதற்கான சூழல் இருக்கிறதா?

பதில் : முதலிலே இதற்கான பதிலை சொல்லிவிட்டேன். மத்திய அரசு தான் முடிவு செய்யும்.

விவசாயிகளுக்கு தடை இல்லை

கேள்வி : சிறு குறு விவசாயிகள் தங்களுடைய விளைச்சலை விற்பனை செய்ய முடியவில்லை, நிறைய வீணாகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து?

பதில் : விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. அறுவடை செய்யவோ, வேளாண் பணியை மேற்கொள்ளவோ, எவ்வித சிரமமும் இல்லாமல் பணி மேற்கொள்ளலாம் என்று அரசு தெளிவுப்படுத்தி விட்டது. அதேபோல, விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கும் எந்த தடையும் கிடையாது. அதற்கு அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் பாதிப்பு. இந்தியா மட்டுமல்ல, உலகமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நம் இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகையே இந்த நோய் அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இந்த நோயினுடைய தன்மையை கருதி, அந்தந்த நாட்டிற்கு தக்கவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு ஒருவர் கூட இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் அரசினுடைய நோக்கம். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.