சிறப்பு செய்திகள்

கோதையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு

சென்னை

ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக கோதையாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 15.7.2020 முதல் 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.