சிறப்பு செய்திகள்

மக்களை எவரும் ஏமாற்ற முடியாது: அவர்கள்தான் எஜமானர்- நீதிபதிகள்; சேலத்தில் முதலமைச்சர் பரபரப்பு பேச்சு

சேலம்

திட்டமிட்டு தவறான, அவதூறான செய்திகளை பரப்பி அரசுக்கு எதிர்க்கட்சிகள் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை சேலம், கொண்டலாம்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நல்லாசியோடு, தமிழகத்தில் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பாமர மக்கள் நல்ல சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளிலேயே முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வழங்கியதோடு மட்டுமல்லாமல், உடனடியாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் முதன்முதலாக கொண்டலாம்பட்டி பகுதியில் இருக்கின்ற ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுவிடும். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இருந்த காலத்தில், ஏழை கர்ப்பிணித் தாய்மார்கள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க முடியாத நிலையை அறிந்த அம்மா அவர்கள், பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வேண்டுமென்பதற்காக 500 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான நவீன மகப்பேறு மருத்துவமனையை சேலம் மாவட்ட பெண்களுக்குக் கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் ஏழை, எளிய தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் வளமோடும், நலமோடும் வாழவேண்டு மென்பதற்காக அந்த மருத்துவமனையிலேயே 50 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் சிறப்புச் சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டது. அதேபோல, அம்மாவின் அரசால், சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, 34 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படுகிறது. மேலும், படிப்படியாக, பத்தே நாட்களில் 100 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குடும்பத்தில் பிறந்த 41 விழுக்காடு மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக இருந்ததால் கடந்த ஆண்டு நீட் தேர்வில், சுமார் 3,060 மருத்துவ இடங்களில் வெறும் 6 இடங்கள்தான் கிடைத்தது. இதை உணர்ந்த அம்மாவின் அரசு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டுதென்பதற்காக 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்து, இந்த ஆண்டு 313 மாணவ, மாணவியர்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை கொண்டு வந்து, 1,650 புதிய மருத்துவ இடங்களைத் தோற்றுவித்ததும் அம்மாவின் அரசுதான். இந்த மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்படும் மருத்துவமனையானது வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளைக் காட்டிலும், நவீன முறையில், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்கள் உயர் சிகிச்சை பெறக்கூடிய வகையில் இருக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சை இந்த 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தலா, சுமார் ரூபாய் 20 கோடி மதிப்புள்ள கேன்சர் நோயைக் கண்டு பிடிக்கும் கருவியை வாங்கிக் கொடுத்துள்ளோம். தனியார் மருத்துவமனையைவிட கூடுதலான வசதியை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தியிருக்கிறோம். அதேபோல், நவீன முறையில் எக்ஸ்-ரே எடுக்கும் கருவி, சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்கக்கூடிய உபகரணங்கள் என பல்வேறு நோய்களைக் கண்டறியக்கூடிய விலை உயர்ந்த, நவீன உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கின்றோம். கேன்சர் நோயை குணப்படுத்த தனி மருத்துவமனையையும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூபாய் 2 லட்சமாக இருந்ததை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியது அம்மாவின் அரசுதான்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த ஆட்சி இருக்குமா? இருக்காதா? என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சில அரசியல்வாதிகள், சுயநலவாதிகள் எங்களை எடை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கனவெல்லாம் கானல் நீராகிவிட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன்கூட இந்த மக்களுக்கு நன்மையை தான் செய்வார்கள். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா நாட்டு மக்களுக்காக இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இன்னும் சில கட்சித் தலைவர்கள் குடும்பத்திற்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

யார்? என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, இந்த இயக்கத்தில் தான் சாதாரணத் தொண்டன்கூட முதலமைச்சராக முடியும். இந்த இயக்கத்திலே சேர்ந்தவர்கள், பொதுவாழ்விற்கு வந்து, உயர்ந்த நிலை வருவதற்கு நானே உதாரணம். நம்மைப்போல் உள்ள ஒருவர் முதலமைச்சராக முடியுமா? ஆனாலும் விட்டுவிடுவார்களா? மூன்றாண்டு காலமாக எவ்வளவு பிரச்சனைகளை உருவாக்கினார்கள்.

அனைத்தையும் சமாளித்து, நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு தந்து, நாட்டு மக்கள் மனதில் இடம் பெற வேண்டுமென்பது சாதாரண விஷயமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவை அனைத்திற்கும் சொந்தக்காரர், இங்கிருக்கிற சேலம் மாவட்டத்துக்காரர்கள். உங்களுடைய ஆதரவினால்தான் இவ்வளவு பலம் எனக்கு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும், சேலம் மாவட்டத்திற்கு மட்டும்தான் முதலமைச்சரின் மாவட்டம் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.

சேலத்திற்கு மாதந்தோறும் ஒருமுறை நான் வந்து கொண்டிருக்கின்றேன். மாவட்ட மக்கள் தாராளமாக, எவ்விதத் தடையும் இல்லாமல் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களைக் கொடுக்கிறார்கள். முடிந்தளவிற்கு மக்களின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு கொண்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை நான் நிறைவேற்றியுள்ளேன். திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சேலம் மாவட்டத்தில்தான் அவருடைய தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.

நான் சேலம் மாவட்டத்திற்கு ஏதும் செய்யாததுபோலவும், இவர்கள் வந்தால் சேலத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவதைப் போலவும் இங்கே பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலத்தில், அம்மாவின் அரசு ஏற்பட்டவுடன், நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, என்னை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நியமித்த பிறகு எத்தனை பாலங்கள் இந்த மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. கொண்டலாம்பட்டிக்கு வருகின்ற பாலம்கூட நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட பாலம் தான். சேலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு மாநகரமாக உருவாக்கித் தந்த அரசு அம்மாவின் அரசு.

அதேபோல, குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு சேலம் மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவேரித் தண்ணீர் தங்குதடையில்லாமல் கொடுக்கின்ற அரசு அம்மாவின் அரசு. சீர்மிகு நகரத் திட்டத்தின் வாயிலாக ஒரே நேரத்தில் ரூபாய் 14.61 கோடி மதிப்பீட்டில் சுமார் 780 தெருவிளக்குகளை அமைத்திருக்கின்றோம். சீர்மிகு நகரத் திட்டத்தின் வாயிலாக சேலம் மாநகரத்தில் ரூபாய் 965.87 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சேலத்திற்கு இவ்வளவு அதிக நிதி கொடுத்திருக்கின்றார்களா?

அதுமட்டுமல்லாமல் Ways and Means Advance என்ற திட்டத்தின் மூலமாக வட்டியில்லா முன்பணக் கடன் மூலம் சுமார் ரூபாய் 168 கோடி மதிப்பீட்டில் 206 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 449 சாலை அமைக்கும் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 435 சாலைப் பணிகள் சேலம் மாநகரத்தில் அமைக்கப்படுகின்றன. எஞ்சிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரத்தில் மட்டும் ரூபாய் 90.65 கோடி மதிப்பீட்டில் 96 கிலோ மீட்டர் நீளத்திற்கு 384 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை எதிர்க்கட்சியினரும் தெரிந்து கொள்ள வேண்டும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உயரிய எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டம் மூலம், ரூபாய் 91.24 கோடி மதிப்பீட்டில் 166 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 428 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. TUFIDCO Fund மூலம், ரூபாய் 74.47 கோடி மதிப்பீட்டில் 122 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 293 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகரத்தில் மட்டும் உட்புறச் சாலையிலிருந்து பிரதான சாலை வரைக்கும் பல சாலைகளை அமைத்து தந்திருக்கிறோம். 14வது மத்திய நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 21.27 கோடி மதிப்பீட்டில் 36 கிலோ மீட்டருக்கு, 104 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 63 பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. 41 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சிறப்பு சாலைத் திட்டத்தில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 29 கிலோ மீட்டருக்கு 50 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிக்கப்பட்டிருக்கின்றன. நகர ஊரக அமைப்பு நிதி மூலம், ரூபாய் 1.46 கோடி மதிப்பீட்டில்
4 எண்ணிக்கையிலான பூங்கா மற்றும் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து தார்ச்சாலை அமைக்கின்ற பணியில், ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் 2.36 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

பகுதி-2 திட்டத்தில், ரூபாய் 87 லட்சம் மதிப்பீட்டில் அஸ்தம்பட்டி வார்டு அலுவலகக் கட்டடம் மற்றும் மாற்றுத் திறனாளிக் களுக்கான 11 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையை ஒழிக்கும் திட்டத்தின் மூலம் ரூபாய் 6.03 கோடி மதிப்பீட்டில் 104 கழிப்பிடங்கள் கட்டுதல் மற்றும் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மூலதன மானிய நிதி மூலம் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவினுடைய முழு உருவச் சிலையுடன் மணி மண்டபம் அண்ணா பூங்கா அருகில் அமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மூலம் ரூபாய் 36.96 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி புதிய மைய அலுவலகம், கோரிநாயக்கன்பட்டி பகுதியில் ரயில்வே தரை கீழ்மட்டப் பாலம் உட்பட 17 பணிகள் எடுக்கப்பட்டு, 16 பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய ஓர பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அம்ரூத் திட்டத்தில், 8.3 கோடி மதிப்பீட்டில் 17 பசுமை வெளி பூங்காங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனி குடிநீர் திட்டத்தில், ரூபாய் 320.54 கோடி மதிப்பீட்டில்
2 சிப்பங்களாக திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாதாள சாக்கடைத் திட்டம் மூலம் ரூபாய் 149.39 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி நடைபெற்று வருகிறது.

இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. ஒன்றுமே செய்யவில்லையென்று எதிர்க்கட்சியினர் பேசுகின்றார்கள். இவ்வளவும் சேலம் மாநகரத்திற்கு மட்டும் செய்திருக்கிறோம். மாவட்டத்திற்கு இன்னும் நிறைய இருக்கின்றது. வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான, அவதூறான செய்தியைப் பரப்பி இந்த அரசுக்கு களங்கம் கற்பிப்பதற்கு முயற்சிக்கிறார்கள், ஒன்றுமே நடக்காது.

எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாலம் கட்டுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் தான் நீதிபதிகள். ஆகவே, அப்படிப்பட்ட, மக்களை ஏமாற்றுபவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுங்கள் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.