தற்போதைய செய்திகள்

ரூ.1.61 கோடியில் கூடுதல் கட்டட பணி – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுகா, பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் கல்வியில் மாணவ, மாணவியர் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு இந்த ஆண்டு கூடுதலாக 4 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மாணவர் மற்றும் மாணவியர் கழிப்பறைகள், சுமார் 360 மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி ரூ.1 கோடியே 61 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று பூமிபூஜை நடத்தப்பட்டது. இந்த மீனவ கிராமத்தில் 10ம் வகுப்பு வரை இயங்குகின்ற இந்த உயர்நிலைப்பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன், திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் வேதையன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) மோகனசுந்தரம், பிரதாபராமபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சிவராசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.