சிறப்பு செய்திகள்

தி.மு.க.வுக்கு விரைவில் சாவுமணி அடிப்பார்கள்

கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் ஆவேசம்

சேலம்

அரசு துறையில் கூட ஊழலை செய்யும் அரசாக திமுக அரசு இருக்கிறது. எனவே தமிழக மக்கள் விரைவில் திமுகவிற்கு சாவுமணி அடிப்பார்கள் என்று கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் கூறி உள்ளார்.

சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி சார்பில், தம்மம்பட்டி பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். திடலில் கெங்கவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தம்மம்பட்டி பேரூர் கழக செயலாளர் வி.எஸ்.ஸ்ரீ குமரன் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர்கள் துரை.ரமேஷ், கூடமலை வி.இராஜா, க.ராமசாமி, மு.சந்திரசேகர், பேரூர் கழக செயலாளர்கள் டி.பழனிசாமி, ஆர்.இளவரசு, பி.ராஜமாணிக்கம், சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், முன்னாள் அமைச்சரும், கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், கழக மகளிரணி இணைச் செயலாளருமான வி.சரோஜா, ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன், தலைமை கழக பேச்சாளர்கள் ஆர்.தர்மராஜன், என்.முஜிபுர் ரஹிமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கழக தொண்டர்களை கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றி வைத்துள்ளது, ஆனால் சிலர் அதற்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை தீய சக்தி திமுகவினரின் மோசடி அரசியலை வேரறுக்காமல் கழகத்தினர் விடமாட்டார்கள்.

இந்தியாவில் உள்ள எந்த கட்சிக்கும் இல்லாத பெருமை திமுகவுக்கு உள்ளது, ஏனென்றால் ஆளும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கட்சியின் பணிகளில் இருந்து வெளியேறியது இதுவே முதல் முறையாக உள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆட்சியை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளாத நிலை போய், கழக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை போய், தற்போது தனது சொந்த கட்சியான திமுக தொண்டர்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று அண்ணா பிறந்தநாளை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம் நமது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடலாம் என கூறியிருந்தார். சேலத்தில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் மீட்டிங் நடத்துகிறார்.

மு.க.ஸ்டாலின் மகன் ஷூட்டிங் நடத்துகிறார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற கழகம் மீட்டிங் நடத்துகிறது. ஆனால் நடிகைகளோட கூத்தாட உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நடத்தி கொண்டிருக்கிறார், அதுவும் சேலத்தில் இருக்கிறார்.

அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் தகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் தான் உள்ளது. அண்ணா எதற்காக ஒரு புதிய கட்சி தொடங்கினார் என்றால் காங்கிரஸ் கட்சியில் முதலாளிகள் மட்டுமே அதிகம் இருந்துள்ளனர். சாதாரண ஏழை எளிய பாட்டாளி மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவே பேரறிஞர் அண்ணா திமுகவை துவங்கினார்.

கருணாநிதி தொடர்ந்து ஸ்டாலின், உதயநிதி என தொடர்ந்து குடும்ப அரசியல் நடத்தி வருவதற்காகவா திமுக தோற்றுவிக்கப்பட்டது. சாதாரண சிலுவம்பாளையம் பகுதி கிளை கழக செயலாளராக இருந்து தன்னுடைய உழைப்பால் படிப்படியாக உழைத்து தமிழக முதல்வராகவும், கழக பொதுச்செயலாளராகவும் மாறியுள்ளார்.

இதைத்தான் அண்ணா நினைத்து திமுகவை உருவாக்கினார், ஆனால் தனது சுயலாபத்திற்காக தனது தந்தைக்கு மு.க.ஸ்டாலின் பேனா சிலை நிறுவ உள்ளார். அது யார் பணம் மக்களின் வரிப்பணம் ஏழை மக்களுக்கு தருவதாக கூறிய மாதம் ஆயிரம் ரூபாய், நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை எல்லாம் எடுத்து கடலில் கொட்டும் ஏற்பாடுதான் அந்த பேனா சிலை.

கடந்த காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்று நோயால் அவதிப்பட்டு வந்து அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தது யார் பணம் என காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் வினா எழுப்பினர், அதற்கு மறுநாள் பதில் தருவதாக கூறிய அண்ணா அவர்கள் அடுத்த நாள் பதில் கூறினார் அப்போது இது கட்சிப் பணமும் இல்லை,

அரசு பணமும் இல்லை எனது அன்புத்தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் மருத்துவம் பார்க்க அமெரிக்க அனுப்பினார் என தெரிவித்தார். அதுதான் கழகத்திற்கும், திமுகவிற்கும் உள்ள வித்தியாசம். தனது சொந்த பணத்தில் தலைவருக்கு மருத்துவம் பார்த்தால் அதிமுக, மக்கள் பணத்தில் பேனா வைத்தால் அது திமுக.

தமிழ்நாட்டிற்கு பெயர் சூட்டியவர் அண்ணா, உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர் புரட்சித்தலைவி அம்மா, தமிழ்நாடு நாள் கண்டவர் எடப்பாடியார். திமுகவினர் தமிழுக்கு என்ன செய்தார்கள் பேனா சிலை 134 அடி எதற்காக வைக்கிறார்கள் தெரியுமா, கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலை 133 அடி அதைவிட ஒரு அடி பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காக.

வள்ளுவரை விட கருணாநிதி பெரிய எழுத்தாளரா, மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பணத்தை செலவு செய்யாமல் பேனா வைப்பதற்காக செலவு செய்கிறார்கள் இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டனர். தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது.

2006-2011 ஆட்சி காலத்தில் திமுக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி மின்வெட்டு அமைச்சராகவே செயல்பட்டு வந்தார். ஆனால் அதற்கு பின்பு பொறுப்பேற்ற கழக ஆட்சி ஆறு மாதத்தில் மின்மிகு மாநிலமாக மாற்றி தந்தது.

அது மட்டுமில்லாமல் மின் உற்பத்தியை பெருக்கி கழக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது மின் கட்டண உயர்வை செந்தில் பாலாஜி உயர்த்தியுள்ளார்.

மோடி அரசு இருப்பதால் இங்கு மின்வெட்டு நடைபெறுவதாக பொய் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கழக ஆட்சி இருக்கும் போதும் மோடி அரசுதான் மத்திய அரசாக இருந்தது. அப்போது மட்டும் ஏன் மின்வெட்டு ஏற்படவில்லை.

திமுக ஆட்சி நிர்வாகம் சரியில்லை, அதனால் மின்வெட்டு தொடர்ச்சியாக ஏற்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக பாழடைந்து உள்ளது. போதை பொருள் விற்பனை என்பது அதிகரித்துள்ளது, குறிப்பாக கல்லூரி அருகிலேயே போதை பொருட்கள் கஞ்சா உள்ளட்டவைகள் விற்பனை செய்து வருகின்றனர்.

போதை பொருளை ஒழிக்க தமிழக அரசு சேகர்பாபுவை அழைத்து பேசினாலே போதும் பாதி மாறிவிடும். போதை பொருள் பார்ட்டி தமிழகத்தில் அதிகம் நடைபெறுகிறது. இது போன்ற தகவல்கள் உளவுத்துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக தமிழகத்தை உலுக்கிய தஞ்சாவூர் தேர் விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் என்ன நடந்தது.

ஊர் கூடி தேர் இழுக்கும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என குறைந்த அளவு மூளை கூடவா இல்லை தேர் இழுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் உளவுத்துறை கடைபிடிக்காமல் இருந்ததால் 12 பேர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரத்திலும் உளவுத்துறைக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை, தொடர்ச்சியாக தமிழக காவல்துறையினர் பங்களிப்பு குறைவாகவும், கண்ணியம் இல்லாத நிலையும் இருந்து வருகிறது. கொலைகாரர்களுக்கு சல்யூட் அடிக்கும் நிலை காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. காவல்துறையும் உளவுத்துறையும் தமிழகத்தில் செத்துவிட்டது.

கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் குறித்து விமர்சனம் செய்து வரும் ஸ்டாலின் நிரந்தரம் இல்லாத முதல்வராகதான் இன்றும் இருக்கிறார். காரணம் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், தங்கை கனிமொழி உள்ளிட்ட அனைவரிடமும்தான் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பள்ளிகளின் வளர்ச்சிக்காலம் காமராஜர் ஆட்சியில்தான் இருந்தது, கல்லூரி கல்வி கருணாநிதி காலத்தில் இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறுவது நியாயம் இல்லாத ஒன்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில்தான் கல்லூரியின் பொற்காலம் என அனைத்து மாணவர்களுக்கும் தெரியும்.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில்தான் பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு வீட்டில் இருப்பவர்களில் இரண்டு பேர் பொறியியல் பட்டதாரிகளாக மாற்றிய பெருமை எம்.ஜி.ஆரை சாரும் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க மறுத்து வருகிறார். காரணம் அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான், ஆனால் எடப்பாடியார் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளிப்பவர், சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துவிட்டு செல்வார்,

சேலத்தில் இறங்கினாலும் அல்லது கோவையில் இறங்கினாலும் அங்கும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து விட்டு, தனது பணிகளை செய்யும் ஆற்றல் எடப்பாடியாருக்கு இருந்தது. ஆனால் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த ஒரு சமயம் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் போது ஒரு செய்தியாளர் ஒன்றை நிமிடம் கேள்வி கேட்டார் அந்தக் கேள்வி விவசாயிகள் சம்பந்தப்பட்டது ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் துறை அமைச்சரிடமும் என்ன கேள்வி கேட்டார் என பேசியது வேடிக்கையான ஒன்று. அதுபோல்தான் அவர் செயல் இருக்கிறது.

தனது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் உள்ளனர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் கூட அவருக்கு தெரியாது. ஏனென்றால் அங்கு உதயநிதி ஸ்டாலின், சபரீசன், துர்கா ஸ்டாலின், கனிமொழி என சட்டமன்ற உறுப்பினர்களை பிரித்து வைத்துள்ளனர். அவருக்கு முழுமையான சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் கூட தெரியாது.

தமிழகத்தின் உணவு களஞ்சியமாக உள்ள டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் திட்டம் கொண்டு வந்தது திமுக ஆட்சி காலத்தில்தான், ஆனால் விவசாயத்திற்கு எதிரான ஆட்சி என ஸ்டாலின் பேசி வந்துள்ளார். கழக ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டம் அறிவிக்கப்பட்டது, அதை செய்தவர் எடப்பாடியார்.

நீட் தேர்வு புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படவில்லை, அதை தமிழகத்தில் வர அனுமதித்ததும் இல்லை. அதன் பின்பு எடப்பாடியார் கழக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி தந்தவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது.

ஆளுநர் கையெழுத்து போடாத நிலையிலும் அவசர சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியவர். எடப்பாடியார் கழகத்தில் ஜாதி, மதம், இனம் கடந்து பொறுப்புக்கள் வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு ஹஜ் யாத்திரைக்காக உதவி செய்வதில் முன் உதாரணமாக கழக ஆட்சி இருந்துள்ளது. திமுக அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக சமூக நீதி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ராமநாதபுரம் பகுதி அமைச்சர் ராஜ கண்ணப்பன் அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் சாதி ரீதியாக இழிவு படுத்திய செயல் அனைவரும் அறிந்தது. ஆனால் கழக ஆட்சியில் 233 சட்டமன்ற உறுப்பினர்களை நிர்வாகிக்கும் சட்டமன்ற தலைவரை தலித் சமூக சபாநாயகரை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சமூக நீதியை யார் கடைப்பிடித்தார்கள் என்பது தெரிந்துவிடும் தமிழகத்தின் நிதி அமைச்சர் ஒன்றும் தெரியாத அமைச்சராக இருக்கிறார். தமிழ் கூட படிக்கத் தெரியாத அமைச்சர் தமிழகத்தில் இருப்பது வெட்கக்கேடானது. தனது அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்கள் கட்சி நடத்துகிறார்கள்.

தனது தாத்தா, அப்பா பெயரை கூறிவரும் நிதி அமைச்சர் ஒன்றும் தெரியாமல் தமிழகத்தில் நிதி அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த ஆட்சி கழக ஆட்சி எடப்பாடியாரால் மட்டுமே இது சாதிக்க முடிந்தது. கழக ஆட்சி நடைபெறும் போது, பாரத பிரதமர் மோடி வரும்போது திமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் தற்போதும் அவர்தான் பாரத பிரதமராக இருக்கிறார், திமுக ஆட்சியில் இப்போது என்ன செய்கிறார்கள்.

எந்த போராட்டமும் மோடி வரும் போது நடைபெறவில்லை. கழக ஆட்சி நடைபெற்ற போது கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டும், கருப்பு கொடிகள் காட்டப்பட்டும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலை தூக்கி விட்டது. கோவை முதல் தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வெடிகுண்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டாமா? சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 நமது என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது, 40-ம் நமது என்றால் அவர்கள் ஆந்திராவிற்குதான் செல்ல வேண்டும்.

தமிழகத்தில் விரைவில் மீண்டும் கழக ஆட்சி அமையப்போகிறது. எடப்பாடியார் தமிழக மக்களை அரவணைத்து செல்லும் தூணாக இருப்பார். கழகம் பிளவுபட்டுள்ளது, ஒன்றுமில்லாமல் உள்ளது என நினைக்கும் அனைவருக்கும் எரிந்து சாம்பலாகி அதிலிருந்து வெளிவரும் பீனிக்ஸ் பறவை போல் கழகம் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும். அப்போது திமுக ஒழிந்து விடும்.

தமிழகத்தில் கழக ஆட்சியின் போது அதிமுக கட்சியினர் எந்த காவல் நிலையத்திலும் அராஜகத்தில் ஈடுபடவில்லை. ஆனால் தற்போது திமுக நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் அராஜகம் செய்து வருகிறார்கள். திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் காவல் அதிகாரியை அறைந்த தருணத்தில் அரை மணி நேரத்தில் வழக்கு இல்லாமல் போய்விட்டது. அதற்கு இன்று வரை பதில் கிடைக்காத சூழல் உள்ளது.

அதேபோல் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மாநகராட்சி பொறியாளரை அடித்து ஓட ஓட துரத்தினார் அவர் வழக்கு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் ராஜ கண்ணப்பன் பாதுகாப்பு அதிகாரியை சட்டமன்றத்திற்கு உள்ளேயே செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபோல தான் ரவுடிகள் சாம்ராஜ்யமாக திமுக உள்ளது. ஆளும் கட்சியை ரவுடிகளாக செயல்பட்டால் மக்கள் என்ன செய்ய முடியும். இது போன்ற சம்பவங்களால் மக்கள் வெறுத்து உள்ளனர். ஆகையால் மீண்டும் தமிழகத்தில் கழக ஆட்சி மலரும். தமிழகத்தில் எடப்பாடியார் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அதனை தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக எடப்பாடியார் மட்டும் தான் இருக்கிறார்.

திமுக தேர்தலில் மண்ணை கவ்வும், தமிழகத்தில் கரப்ஷன், கலெகசன், கலெக்சன் திமுக செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் முதல்வரை பின்னுக்குத் தள்ளி மகனும், மருமகனும் செய்யும் வேலைகள் பல உள்ளது. படம் எடுப்பதும் ஒருவரே படத்தை ரிலீஸ் செய்வதும் ஒருவரே என இருப்பது உதயநிதிக்கு வழக்கமான ஒன்று, அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருபவர் சபரீசன்.

கருணாநிதியின் குடும்பம் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு எதிராகவே ஏற்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக பால் பாக்கெட்டுகளின் அளவு 80 மில்லி குறைவு உள்ளது இதற்கு அமைச்சரை கேள்வி கேட்டால் அந்த ஒரு பாக்கெட் பாலில் மட்டும் அளவு குறைந்துள்ளது என வேடிக்கையாக பேசுவது வேதனை ஏற்படுத்துகிறது.

ஆவின் நிறுவனத்தில் அளவு என்பது அனைத்து பாக்கெட்டைகளுக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்பதை கூட அந்த மந்திரிக்கு தெரியாத நிலை உள்ளது. இதிலிருந்து தெரிகிறது அரசு துறையில் கூட ஊழலை செய்யும் அரசாக திமுக அரசு இருக்கிறது. எனவே தமிழக மக்கள் விரைவில் திமுகவிற்கு சாவு மணி அடிப்பார்கள்.

இவ்வாறு கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் பேசினார்.