தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி பணிகள் முடக்கம் – முன்னாள்அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றச்சாட்டு

திண்டுக்கல், டிச. 3-

விடியா தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரவர நிதி ஒதுக்கீடு செய்யாமல் வளர்ச்சி பணிகள் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அய்யலூரில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரிவர நிதி வரவில்லை. இதனால் வளர்ச்சித் திட்டங்கள் எங்கும் நடைபெறவில்லை. கழக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்து ஆரம்பித்த பணிகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதுவும் கழகத்தின் சாதனை தான். நகர் மற்றும் கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கழகத்தினர் கண்காணிக்க வேண்டும். பணிகள் சரிவர நடக்கவில்லை என்றால் மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களையும் நடத்த வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதால் யாரும் முறைகேடு செய்ய முடியாது. முறைகேடு செய்து வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் செய்யும் பிரசாரங்களை நம்ப வேண்டாம்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றியதை வீடுதோறும் சென்று நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தாலே போதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றியைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான தென்னம்பட்டி பழனிசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், ஒன்றிய கழக செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.