எடப்பாடியாருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு
விருதுநகர்
திமுக அரசை கண்டித்து சிவகாசியில் வரும் 29ம்தேதி நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பது என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலைவாசியை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதற்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனைக்கூட்டம் விருதுநகரில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமாரன் தலைமை வகித்தாா்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் முகமது நெய்னார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மச்சராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.