சிறப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ரூ.9,000 கோடி சிறப்பு மானியம் – பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கோரிக்கை

சென்னை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தமிழ்நாட்டின் நிதித் தேவைத் தொடர்பாக பேசியதாவது:-

கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பாக தாங்கள் அளித்துவரும் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வாரம் ஒருமுறை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் தொடர்ந்து பேசி வருகிறேன். 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 19ம்தேதி முதல் 30ம்தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொழில் மற்றும் வேளாண் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீரான முறையில் பேணப்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய தமிழகத்தில் அதிகபட்சமாக 45 அரசு பரிசோதனை நிலையங்களும், 34 தனியார் நிலையங்களும் என மொத்தம் 79 பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிகளவாக கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் இதுவரையில் 7.48 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 48 ஆயிரத்து 19 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான மருத்துவ சிகிச்சைகள் மூலமாக இறப்பு விகிதம் என்பது 1.09 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் குறைந்த அளவாகும். இதுவரை 26 ஆயிரத்து 782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைவோரின் சதவீதம் 55.8 சதவீதமாக உள்ளது.

இதுவரை காய்ச்சல் கண்டுபிடிக்கும் வகையில் 300 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 10 நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 98 தன்னார்வலர்கள் மற்றும் 2.700 கள பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது.

எனவே, நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொது முடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நோய் தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல வாரியாக அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மூழுவீச்சில் மாநகராட்சி பணியாளர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள். சென்னையில் 53 கொரோனா தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு 17 ஆயிரத்து 500 கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர கால நடவடிக்கைகளுக்காக கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மூலம் 26 லட்சம் முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வரை விலையில்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதி ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டுள்ளது. 35.67 தொழிலாளர்கள் மற்றும் 17 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 1000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்களுக்கு விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்துள்ள வழிமுறைகளின்படி தமிழகத்தில் 3 லட்சத்து 85 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு 261 ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கான பயணச்செலவு தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான சில முக்கிய கோரிக்கைகளை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகளின் அளவுகளை உயர்த்திட ரூ.3ஆயிரம் கோடி நிதியை வழங்கிட வேண்டுமென ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை மீண்டும் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். தேசிய சுகாதார இயக்கத்தின் மூலமாக இரண்டாவது தவணைத்தொகைகளை விடுவிக்க வேண்டும். முதல் தவணைத் தொகைக்கான பயன்பாட்டுச் சான்று ஏற்கெனவே ( மத்திய அரசுக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு சிறப்பு மானியத்தை ஒதுக்கிட வேண்டும். மார்ச் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க வேண்டும்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிக்குழு பரிந்துரைத்துள்ள 50 சதவீத மானியங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநிலங்களுக்கான வழிவகை கடன் வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை தற்போதைய நிதியாண்டில் வட்டியில்லாத கடனாக இரு மடங்காக உயர்த்தி அளித்திட வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள தற்காலிக மானியமாக ஆயிரம் கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிதியத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறுந்தொழில்கள் மேம்பாட்டுக்காக இந்திய ரிசர்வ் வங்கி நிதித்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு வழங்கிட அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

முன்னதாக, எல்லைப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி, மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் சில மணித்துளிகள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சீன விவகாரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக தங்களின் பக்கம் நிற்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.