தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு மரண அடி கொடுப்போம்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சூளுரை

தருமபுரி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பென்னாகரத்தில் நகர செயலாளர் பி.எம். சுப்பிரமணியன் தலைமையில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் கே.சி.அன்பு வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பென்னாகரத்தில் கழகம் வீக்காக இருப்பதாக தி.மு.க.வினர் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பென்னாகரம் தொகுதியில் கழகம் மிக பலமாக இருக்கிறது. பென்னாகரம் பேரூராட்சியில் கழக அரசின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கழிவுநீர் கால்வாய் வசதிகள், 18 வார்டுகளிலும் தரமான சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் கழக அரசால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அமைக்க கழக அரசு நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

போடூர் பகுதியில் கழக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது பணி நடந்து வருகிறது. பென்னாகரம் தொகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, அம்மா இரு சக்கர வாகனம், வேளாண் உபகரணங்கள், கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் வசதிகள், சுழல் நிதிகள், அனைத்து கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதிகள் கழக அரசால் மட்டுமே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இருந்த போது இந்த பகுதிகளுக்கு எந்தவித மக்கள் நலத்திட்டங்களையும் வழங்கவில்லை. நலத்திட்ட பணிகளும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு கழக அரசால் மட்டுமே அனைத்து நலத்திட்டங்களையும் செய்ய முடியும்.

தற்போது கழக அரசு மீது பொய்யான பரப்புரையை தி.மு.க.வினர் பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு கழகத்தினர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும்‌. பென்னாகரம் தொகுதி கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.