தற்போதைய செய்திகள்

ரூ.39.45 லட்சத்தில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

திருப்பூர்

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.39.45 லட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து 23 நபர்களுக்கு ரூ.11.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி காந்தி நகர் பகுதியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய பல்நோக்கு மைய கட்டிடத்தில் அமைந்துள்ள நியாய விலைக்கடையினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, பெரியகோட்டை ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.38 லட்சம் மதிப்பீட்டில் காமராஜர் நகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆறுமுககவுண்டர் லே அவுட் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி என உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 39.45 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

முன்னதாக, பெரியகோட்டை ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் உலர் பொருட்களையும் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு ஆகிய தொழில் முனைவோர்களுக்கான கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி, குரிஞ்சேரி ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த 22 நபர்களுக்கு ரூ.5,83,500 மதிப்பிலான தொழிற் கடனுதவியினையும் மற்றும் 1 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான வங்கி நேரடி கடனுதவியினையும் என 23 நபர்களுக்கு ரூ.11.83 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதலமைச்சர் அறிவுரையின் படி, திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து நமது மாவட்டத்திற்கு வருபவர்களை கண்காணிப்பதற்காக் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு பிறகே நமது மாவட்டத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நமது மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் நமது மாவட்டத்தில் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர்.கருவி வழங்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கூடுதலாக 1 பரிசோதனை கருவியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த பரிசோதனை முடிவுகள் விரைவாக பெற முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் கே.மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி, உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், ஜீவானந்தம், பெரியகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் பேச்சியம்மாள் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் ஜெய்சிங்சிவகுமார், கொழுமம் தாமோதரன் கூட்டுறவு சங்க தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.